திருமதி ஞானம் ஞானசேகர ஐயர்
திருமணமான பெண்களுக்கு எல்லாச் சம்பத்துகளையும் விட திருமாங்கல்ய பலந்தான் அதி சிறந்ததாகும். இதனாற்றான் திருமணமான பெண்களை ஆசீர்வதிக்கும் பொழுது, `தீர்க்க சுமங்கலி பவ' எனவும், `மாங்கல்ய பலம் கிடைக்கட்டும்' எனவும் வாழ்த்துவார்கள். இந்தத் தாலிப் பாக்கியத்தின் பலத்தினை வளப்படுத்த சுமங்கலிப் பெண்களால் அனுட்டிக்கப்பெறும் நோன்பே காரடை நோன்பாகும். இது பெண்களுக்கு மட்டுமே உரிய விரதமாகும். வருடந்தோறும் பங்குனி மாதம் (தமிழுக்கு) முதற் திகதியன்று இந்த நோன்பு அனுட்டிக்கப்படும்.
இன்று மார்ச் மாதம் 14 ஆம் திகதி காரடை நோன்புத் தினமாகும். இதனை காமாட்சி நோன்பென்றும் கூறும் வழக்குமுண்டு.
பார்வதி தேவியார் ஒரு சமயம் நோன்பிருந்து காஞ்சி ஏகாம்பரநாதரைப் பூசை ஆராதனை செய்து, சிவத்திற்கும் சக்திக்குமிடையில் எந்தக் காலத்திலும் பிரிவு ஏற்படாதிருக்க வேண்டுமெனப் பிரார்த்தனை செய்தார். அங்ஙனம் பிரார்த்தனை செய்த நாளையே காரடை நோன்பு என புராணங்கள் கூறுகின்றன.
எமது சமய கலாசார மரபின்படி திருமணத்தின் பொழுது, திருமாங்கல்யத்தினை மஞ்சள் கயிற்றில் கோர்த்துத்தான் கட்டவேண்டும். `மாங்கல்யம் தந்துனானே' என்ற மந்திரத்தில், `தந்து' என்பது மஞ்சள் கயிறாகும். மிகப் புராதன காலத்தில் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் துண்டினைத்தான் திருமாங்கல்யமாகக் கட்டுவார்கள்.
காலப்போக்கில் பொன்னினால் செய்யப்பெற்ற திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் கோர்த்து கட்டப்படும் வழக்கம் ஏற்பட்டது. மங்கலப் பொருட்களில் மஞ்சள் முக்கியமான பொருளாகும். ஆச்சாரியார் சுப கிரியைகளுக்கு சிட்டை எழுதும் பொழுது மஞ்சளைத்தான் முதலில் எழுதுவார். காரடை நோன்பு நாளில் மஞ்சள் கயிற்றில் கட்டப்பட்டிருந்த திருமாங்கல்யத்தின் கயிற்றினை மாற்றி புதிய கயிற்றில் கட்டிக் கொள்வார்கள்.
காரடை நோன்பினை பகல் முழுவதும் உபவாசமாக இருந்து நோற்றல் வேண்டும். மாலை ஆனதும் குத்துவிளக்கேற்றி அதற்கு முன் கும்பம் வைத்து, மங்கலப் பொருட்களான தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், சுவர்ணபுஷ்பம் (காசு) முதலியவற்றை வைத்தல் வேண்டும். கும்பத்தின் மீது மஞ்சள் கயிற்றினை வைத்து கும்பத்திற்கு பூசை, தேவி பாராயணம் செய்து தூப தீப ஆராதனைகளுடன் அடையும் வெண்ணெயும் நிவேதித்தல் வேண்டும். இவற்றினை நிவேதனம் செய்யும் பொழுது, `ஓரடையும் உருகாத வெண்ணெயையும் நிவேதனம் செய்துள்ளேன். எந்தக் காலத்திலும் எனது கணவன் என்னை விட்டுப் பிரியாதிருக்க திருமாங்கல்ய பலத்தினை தர வேண்டும்' எனப் பிரார்த்தனை செய்ய வேண்டும். (சிவப்பு பச்சையரிசியை ஊற வைத்து மாவாக்கி அதனுடன் தேங்காய் பூவையும் சர்க்கரையையும் சேர்த்து அடையாகத் தட்டி ஆவியில் வேக வைத்தால் அடையாகும்). இரவுப் பொழுது அந்த நிவேதனத்தை உணவாக உட்கொண்டு, மறுநாட்காலை பாரணம் செய்தல் வேண்டும். விஷ்ணு, சிவன் ஆகிய கடவுளர்க்கு ஆலம் இலை விசேடமானது. எனவே, ஆலம் இலையில் நைவேத்தியம் வைக்கும் வழக்கமும் உண்டு.
இந்த விரதம் தொடர்பான வேறும் ஒரு புராணக் கதையும் உண்டு. அஸ்வபதி மன்னனின் மகளான சாவித்திரி, காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சத்தியவான் என்பவனைத் திருமணம் செய்ய விருப்பம் கொண்டாள். அரசனுக்கு, நாரதர் அவ் இளைஞன் தொடர்பான விபரத்தினைத் தெரிவித்தார். அவ் இளைஞன் அரசகுமாரன் எனவும், அவனது ஆயுட்காலம் குறைவானது, சாவித்திரி அவனைத் திருமணம் செய்தால் திருமாங்கல்யத்தினை இழப்பாள் எனவும் கூறினார். அரசன் மகளிடம் இவ் விபரத்தினைக் கூறினார். ஆனால், சாவித்திரியோ பிடிவாதமாக சத்தியவானையே திருமணம் செய்தாள். ஒரு வருடத்தின் பின் சத்தியவான் சாவித்திரியின் மடிமீது சாய்ந்தவண்ணம் உயிரை விட்டான். சத்தியவானின் உயிரை இயமன் கொண்டு செல்வது சாவித்திரியின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. இயமனிடம் "எனது கணவனின் உயிரை எடுக்காதே" என மன்றாடினாள். அதற்கு இயமன் அவளிடம், உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள் தருகிறேன் என்றான். சாவித்திரி இயமனிடம் "எனக்கு பிறக்கின்ற நான்கு குழந்தைகளையும் என் மாமனார் தனது மடியில் வைத்து தாலாட்டி சீராட்ட வேண்டும்" என வரம் கேட்டாள். இயமனும் அப்படியே ஆகட்டும் என்றான். சாவித்திரி அப்போது இயமனிடம், `அப்படியானால் எனது கணவரின் உயிரைத் திருப்பித்தா' என்றாள். அளித்த வரத்தினை மீளப் பெறமுடியாத இயமன் சத்தியவானின் உயிரை மீளக் கொடுத்துவிட்டுச் சென்றான். கணவனை உயிர்மீட்ட தினத்தன்று கார் அரிசியைக் கொண்டு அடைதட்டி அம்பிகையை சாவித்திரி பிரார்த்தனை செய்தாள். அத்தினமே காரடை நோன்பு அனுட்டிக்கப்படுகிறது. (ஆவணி மாதப் பௌர்ணமி தினத்தில் சாவித்திரி நோன்பு என அனுட்டிக்கும் வழக்கமும் உண்டு).
காரடை நோன்பு தினத்தன்று வயதில் முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் ஆசீர்வாதம் பெறுவது நன்று. அத்துடன், வீட்டிற்கு சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் காரடைப் பிரசாதமும், மஞ்சள் கயிறும் வழங்குவதன் மூலம் மாங்கல்ய பலமும், மகாலட்சுமி கடாட்சமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். எனவே, திருமணமான சுமங்கலிப் பெண்கள் யாபேரும் இந்நாளில் காரடை நோன்பினை அனுட்டித்து சகல செல்வங்களையும் பெற்றுச் சீருஞ்சிறப்போடும் வாழ்வார்களாக!