Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கொசோவோ மக்களுக்கு ஒரு நீதி இலங்கைத் தமிழருக்கு ஒரு நீதியா?
[14 - March - 2008] [Font Size - A - A - A]
-சோலை-

ஈழப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாது என்று பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரதிபா பட்டீல் தெரிவித்திருக்கிறார்.

அடுத்து நமது அண்டை நாடுகளுடன் உள்ள உறவுகள் பற்றி பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கம் தந்தார். `ஈழப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது' என்று அவரும் அறிவித்திருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தகைய போதி மரத்துப் புத்தர்களின் உபந்நியாசங்களைக் கேட்டுக் கேட்டு சோர்ந்து போனோம்.

ஆனால், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ என்ன சொல்கிறார்? போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்ட அவர், `இறுதிவரை ஈழப் போராளிகளை எதிர்த்துப் போராடுவோம்' என்கிறார். ஆனால், தனித்து நின்று இலங்கை அரசு அத்தகைய போரை நடத்தமுடியாது. உலகம் முழுமையும் ஆயுதங்களை அள்ளிக்கொண்டு வந்தாலும் ஈழப் போரை வெற்றி கொள்ள முடியாது. ஆனால், இலங்கை இராணுவத்திற்கு இந்தியா என்னென்ன இராணுவ உதவிகள் செய்கிறது என்பதனை நமது முப்படைத் தளபதிகளே அவ்வப்போது வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

`ஈழப் போராளிகளின் கப்பற்படை வலிமையை இந்தியக் கடற்படையின் உதவியோடு நிர்மூலமாக்கி விட்டோம்' என்று இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்திருக்கிறார். இன்னும் நவீன ஆயுதங்கள் வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியும் படைத்தளபதிகளும் டில்லிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் எதற்காக மன்மோகன்சிங் அரசு அகிம்சாவழியில், அறவழியில் தான் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு என்று உபதேசம் செய்ய வேண்டும்?

பாலஸ்தீனத்தில் புதிய அரசு அமைய வாக்கெடுப்பு நடந்தது. காசாப்பகுதி மக்கள் ஹமாஸ் இயக்கத்திற்கு வெற்றி தேடித் தந்தனர். ஆனால், அங்கே அமைந்த மக்கள் அரசை அங்கீகரிக்க முடியாது என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்துவிட்டன.

இன்றைக்கு அந்த காசாப்பகுதி ஏதோ கதிரவன் ஒளிபாயாத கானகத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. அதனை அழிப்பதற்கு இஸ்ரேல் தினம் தினம் குண்டு மழை பொழிகிறது. அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள் என்று குண்டுகளுக்குப் பலியாகிறார்கள். அந்த அநியாய யுத்தத்தை உலகம் கண்டிக்கிறது. ஏன்? இந்தியாகூடக் கண்டிக்கிறது. அதுவும் ஒரு நாடகம்தான்.

சர்வதேசப் பிரச்சினைகளில் அமெரிக்க எவ்வழியோ அதே வழிதான் எம் வழி என்று மன்மோகன்சிங் அரசு செயல்படுகிறது. இஸ்ரேல் என்ற நாட்டை ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருக்கும்வரை இந்தியா அங்கீகரித்ததில்லை காரணம், மத்திய கிழக்கில் அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்கு அந்த யூதர்களின் நாட்டை அமெரிக்கா உருவாக்கி வைத்திருக்கிறது.

இஸ்லாமிய எதிர்ப்பில் வாஜ்பாய் அரசு அமெரிக்காவின் வற்புறுத்தலில் இஸ்ரேலை கள்ளத்தனமாக அங்கீகரித்தது. இப்போது மன்மோகன்சிங் அரசு அமைந்த பின்னர், இஸ்ரேலை முழுமையாக அங்கீகரித்திருக்கிறது. இன்றைக்கு இந்தியாவிற்கு அதிக அளவில் நவீன ஆயுதங்களை விற்பதே இஸ்ரேல்தான்.

அந்த இஸ்ரேல் இன்றைக்கு பாலஸ்தீனத்தின் ஓர் அங்கமான காசாப் பகுதியை மயான பூமியாக்குகிறது. நாமும் கண்டிக்கிறோம் என்கிறது மன்மோகன்சிங் அரசு.

இன்றைக்கு காசாப் பகுதியில் எத்தகைய மனித வேட்டையை இஸ்ரேல் நடத்துகிறதோ, அதே போல்தான் ஈழத்தில் சிங்கள இனவாத அரசு மனித வேட்டையை நடத்துகிறது. வன்னிப்பகுதியில் இலங்கை அரசின் போர் விமானங்கள் தினம் தினம் குண்டு போடுகின்றன.

அப்பாவி மக்களின் குடியிருப்புகள் தகனம் செய்யப்படுகின்றன. மகளிர் விடுதிகள், குழந்தைகள் காப்பகங்கள் தகர்க்கப்படுகின்றன. இங்கே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று பறைசாற்றுகிறது. ஆனால், சிங்கள இனவாத அரசின் பயங்கரவாதம் மனித இனத்தையே பொட்டுப் பூச்சிகளாகக் கருதி குண்டு வீசிக் கொலை செய்கிறது.

காசாப்பகுதியில் இஸ்ரேல் குண்டு வீசிக் கொலைபாதக நர்த்தனம் ஆடுவதற்கும், ஈழத்தில் இனவாத அரசு குண்டுகள் பொழிந்து இரத்த வெறிப் போராட்டம் ஆடுவதற்கும் என்ன வேறுபாடு? இஸ்ரேல் யூத இனவாதமும், சிங்கள இனவாதமும் ஒரே மாதிரியான படுகொலைகளைத் தான் செய்கின்றன. ஆனால் நாமும் கண்டிக்கிறோம் என்று இஸ்ரேலைக் கண்டிக்கின்ற இந்திய அரசு, இதோ கூப்பிடு தூரத்தில் இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலையைக் கண்டுகொள்வதில்லையே ஏன்? அந்தத் தமிழ் இனப்படுகொலைக்குத் தாராளமாக ஆயுதங்கள் வழங்குவது ஏன்?

ஈழத்தில் எழுகின்ற அவலக்குரல் இந்திய அரசிற்குக் கேட்பதில்லை. ஆனால், எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் காசாவில் எழும் அபாயக்குரல் மட்டும் அதன் காதுகளில் விழுகிறதே எப்படி? காசா மக்களின் வலியும் ஈழத்து மக்களின் வலியும் ஒன்றுதானே!

இதோ! இன்றைக்கு கொசோவோ என்ற நாடு பிறந்திருக்கிறது. அதனை ஐ.நா.மன்றம் அங்கீகரித்திருக்கிறது. என்னென்ன காரணங்களுக்காக ஈழ மக்கள் தனி ஈழம் கேட்கிறார்களோ, அதே காரணங்களுக்காகத்தான் கொசோவா பிறந்திருக்கிறது. அந்தப் புதிய நாட்டை இந்தியாவும் அங்கீகரிக்கிறது. அதற்கு முன்னர் சட்டச்சிக்கல் என்று கொஞ்சம் சிலம்பம் ஆடிப் பார்க்கிறது.

இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியின் நாஜிப் படைகள் அண்டையிலுள்ள பால்கன் நாடுகளை ஆக்கிரமித்தன. ஆறு தேசிய இனங்கள் மார்ஷல் டிட்டோ தலைமையில் ஒன்றுபட்டுப் போராடினார்கள். விடுதலை பெற்றன. அந்த தேசிய இனங்கள் டிட்டோ தலைமையில் யூகோஸ்லோவியா என்ற குடியரசை உருவாக்கின. ஆனால், அவரது மறைவிற்குப் பின்னர், தனித்தனி நாடுகளாக அந்த தேசிய இனங்கள் சுதந்திரம் பெற்றன.

சேர்பியா மட்டும் யூகோஸ்லோவியாவின் மீதமாக இருக்கிறது. இனத்தால், மொழியால் சேர்பியார்கள் வேறுபட்டவர்கள். ஒரு மாநிலத்தில் வாழும் கொசோவோ மக்கள் இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள். சேர்பியர்கள் கிறிஸ்தவர்கள். கொசோவோ மக்கள் அல்பேனிய இஸ்லாமியர்கள்.

எனவே, இன்றைக்கு தமது இனம், மொழி, பண்பாட்டைக் காக்க ஈழ மக்கள் போராடுவது போல கொசோவோ மக்கள் போராடினர். இன்றைக்கு தங்களுக்கென்று ஒரு தாயகம் கண்டுவிட்டனர். அதற்காக அந்த மக்கள் செய்த தியாகம் அளப்பரியது.

இன்றைக்கு ஈழமக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து பனிப்பிரதேசங்களில்கூட வாழ்கின்றனர். ஆனால், அவர்களெல்லாம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்கான பங்கினை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதேநிலையில்தான், அல்பேனிய கொசோவோ மக்களும் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். நேருக்கு நேராகக் களத்தில் நின்றவர்கள் குறைவுதான். ஆனால், வீரம் செறிந்த அந்த மக்களை சேர்பிய சேனையால் வெற்றி பெற முடியவில்லை. இத்தனைக்கும் அந்தச் சேனைக்கும் ரஷ்யாகூட ஆதரவு அளித்தது. இன்றைக்கு ஈழ மக்களுக்கு எதிராக சிங்கள இனவாத அரசிற்கு எந்ததெந்த நாடுகள், எந்தெந்த சக்திகள் துணைக்கு வருகின்றன என்பதனை நாம் அறிவோம்.

சேர்பியாவில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எப்படி அல்பேனிய கொசோவோ மக்கள் தனி தேசிய இனம் என்பதனை இன்றைக்கு உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறதோ, அதேபோலத்தான் சிங்களத்தின் வடக்கிலும் கிழக்கிலும் வரலாற்றுக்காலம் தொட்டு வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் தன் தேசிய இனம் சார்ந்தவர்கள் என்பதனை உலகம் அறியும்.

தங்கள் இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் சொந்த மண்ணிலேயே ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அல்பேனிய கொசோவோ மக்களுக்கு ஒரு நீதி, ஈழ மக்களுக்கு இன்னொரு நீதி என்றா உலகம் சொல்லப்போகிறது. அதனைப் புரிந்துதான் ஈழப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடி யாது என்று இந்திய அரசு தத்துவம் சொல்கிறது.

இலங்கை துண்டாடப்பட வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. ஈழ மக்களின் வழிபாட்டு உரிமை கூடப் பறிக்கப்பட்டிருக்கிறது. பௌத்தம்தான் அரசின் மதம் என்று இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில் சிங்களம் மட்டும்தான் தாய்மொழி, அரசுமொழி என்ற நச்சு விதைகள் தூவப்பட்டதால்தான் ஈழமே எழுச்சி பெற்றிருக்கிறது. எனவே, இலங்கையின் சுயாட்சி பெற்ற பகுதியாக ஈழம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதனை ராஜபக்ஷக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Email this page Your Opinion Print this page
கொசோவோ மக்களுக்கு ஒரு நீதி இலங்கைத் தமிழருக்கு ஒரு நீதியா?
மாங்கல்ய பலத்தினைத்தரும் காரடை நோன்பு
மலேசிய அரசியலில் மதச்சார்பற்ற நிலையைத் தழுவும் வாக்காளர்கள்
சட்ட, சமூகத்துறைகளில் சிறப்புடன் அளப்பரிய சேவையாற்றிய செல்வராஜா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com