2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தனது பொருளாதார, இராணுவ நலன்சார் ந்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தீவிரமாக உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக முன்னர் பணியாற்றிய ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றின் போது, `9/11 இற்குப் பிறகு எமது அச்சத்தையும் ஆத்திர உணர்வையுமே நாங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம். பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களான நம்பிக்கை, சந்தர்ப்பம் என்பனவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் பார்க்க பீதியையும் விசனத்தையுமே ஏற்றுமதி செய்து வருகின்றோம்' என்ற உண்மையை ஆர்மிரேஜ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அத்துடன், 9/11 இன் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முன்னெடுப்பதிலேயே அமெரிக்கா தனது முழுமையான கவனத்தையும் கரிசனையையும் செலுத்திவருவதாகவும் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுப்பதில் வேறு இதர பல கருவிகளும் உள்ளன என்று குறிப்பிட்டிருக்கும் ஆர்மிரேஜ், சிந்தனைகளின் சக்தியே மிகவும் அதிகளவுக்கு உபயோகப்படும் கருவியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதுடன், 2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா இரண்டு விதத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முதலாவது பாதிப்பு தாக்குதல் நடத்தியோரால் ஏற்பட்டதாகும். இரண்டாவது தாக்கமாக தேசிய மட்டத்திலான நம்பிக்கையை நாங்கள் இழந்ததுடன், பயங்கரவாதம் என்ற கண்ணாடியூடாகவே உலகத்தை நாம் பார்த்து வருகிறோம். பயங்கரவாதத்துடன் போராடுவது முக்கியமான சவாலாக இருந்தாலும் அதுவே அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரேயொரு அங்கமாக இருக்கக்கூடாது என்று ஆர்மிரேஜ் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையானது பயங்கரவாதமென்ற வில்லைகளூடாகவே உலகை பார்ப்பதாக தற்போது அமைந்திருக்கின்றதென்பதால் உலகின் பல பாகங்களில் உள்ள சிறுபான்மைச் சமூகங்கள் மோசமாக பாதிக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. நாடுகள் பலவற்றில் மொழி, மத, கலாசார உரிமைகளுக்காக போராடிவரும் பல சிறுபான்மைச் சமூகங்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு உலக வல்லரசான அமெரிக்கா தற்போது வரித்துக் கொண்டிருக்கும் `பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்ற கனதியான கவசம் மிக அதிகளவுக்கு உதவுகின்றது.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்கள் இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அகிம்சாவழிப் போராட்டத்திலும் பார்க்க ஆயுதப் போராட்டங்களே பல பகுதிகளில் உக்கிரமாக இடம்பெற்று வருகிறது. தத்தமது இன, மத, மொழி, கலாசாரத்திற்கு சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்படாதமையே இந்தப் போராட்டங்கள் பலவற்றுக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்நிலையில் தத்தமது அரசியல் நலன்களுக்காக பல அரசாங்கங்கள் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு அல்லது பாதிப்புகளால் உருவான மோதல்களுக்கு உரிய முறையில் தீர்வு காணாமல் படை பலத்தை பிரயோகித்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து ஒடுக்குமுறைகளை மேற்கொள்வது அறியாத ஒரு விடயமல்ல.
இத்தகைய நடவடிக்கைகள் பல காலமாக தொடர்வதும் உலக ஒழுங்கின் நியதி போன்று இவை நியாயப்படுத்தப்படும் தன்மையுமே அதிகளவுக்கு காணப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நிலைப்பாட்டை பல தேசங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று அதனை தமது இன, மத மேலாதிக்க கொள்கைகளுக்கு சாதகமான முறையில் முன்னெடுத்து வருகின்றன. ஆனால், எதுவும் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கப் போவதில்லையென்பதற்கு ஆதாரமாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டதை ஆர்மிரேஜ் தெரிவித்திருக்கும் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. பகைவர்கள் யார்? நண்பர்கள் எவர்? என்று திட்டவட்டமாக வரையறைப் படுத்திக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வெளிநாட்டுக் கொள்கை அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியோ உலக வல்லரசான அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென்ற நிலைப்பாட்டினால் தொடர்ந்தும் பீதியையும் வெறுப்புணர்வையும் ஏற்றுமதி செய்து கொண்டிராமல் நம்பிக்கை உணர்வை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.