பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரியை நியமிக்க அக்கட்சி கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்று முடிந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றிபெற்ற அதேநேரம் அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி உள்ளது.
இந்நிலையில் இவ்விருகட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ள அதேநேரம் பிரதமரை நியமித்தல் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டிருந்தது.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் ஏற்கனவே இஸ்லாமாபாத்தில் நடந்ததும் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்தக் கட்சி எம்.பிக்களின் கூட்டம் 2 ஆவது முறையாக இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்ததுடன் கட்சியின் இணைத் தலைவரும் பெனாசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்களில் பெரும்பாலானோர் சர்தாரிதான் பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகும் வரை இடைக்கால பிரதமர் ஒருவரை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
இடைக்கால பிரதமர் பதவிக்கு பாமிடா மிர்சா, சர்தாரியின் சகோதரி அஸ்ரா பெச்சுகோ, சையத் குர்ஷித் அகமது ஷா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
அதில் யாரை இடைக்கால பிரதமராக நியமிப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சர்தாரிக்கு வழங்கப்பட்டது. கட்சியின் துணைத் தலைவர் மக்தூம் அமீன்பாமை பாராளுமன்றக் கட்சித் தலைவராகவும் அவருடை மகனை அமைச்சர் அந்தஸ்தில் பிரதமரின் ஆலோசகராகவும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
பெனாசிருக்கு நெருக்கமான பாம் பிரதமராவதை மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் கூட்டணிக் கட்சியினரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. "சர்தாரியைப் பிரதமராக தேர்ந்தெடுப்பதால் கட்சி பிளவுபடாமல் இருக்கும்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜஹால்கீர் பதர் தெரிவித்தார்.
இதேவேளை சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள அதேநேரம் இதுவரை முடக்கப்பட்டிருந்த அனைத்து சொத்துகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ மற்றும் அவருடைய கணவர் ஆசிப் அலி சர்தாரி மீது அதிபர் முஷாரப் பல்வேறு ஊழல் வழக்குகளை தொடர்ந்து இருந்தார்.
அவர்களுடைய சொத்துகளையும் முடக்கினார். பாகிஸ்தானில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடந்ததை முன்னிட்டு பெனாசிருக்கும் சர்தாரிக்கும் பொது மன்னிப்பு அளித்து, ஊழல் வழக்குகளைத் வாபஸ் பெறுவதற்கான அவசர சட்டத்தை முஷாரப் பிறப்பித்தார்.
இந்நிலையில் பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். அந்த அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
அதனால், சர்தாரி மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக அரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ராவல்பிண்டி இலஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சர்தாரி மீது தொடரப்பட்டிருந்த 7 ஊழல் வழக்குகளில் 5 வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டன. மீதியுள்ள 2 வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தன.
அதில் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எஞ்சியுள்ள ஒரு வழக்குப் பற்றி நாளை முடிவைச் சொல்வதாக நீதிபதி ஜாகிர் குவாத்ரி கூறினார்.
அதுவும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சர்தாரியின் முடக்கப்பட்ட அல்லது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள்,வங்கிக் கணக்குகள் அனைத்தையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.