* தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுடனான தேர்தல்கள் நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் அரசாங்கத்தின் ஒரு நடவடிக்கையாகும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெற்றதென்றும்,ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியென்றும் அரசாங்கம் பெருமைப்பட்டு அறிக்கைவெளியிட்டுள்ளது.
கிழக்கை விடுவித்துவிட்டோம் என்ற பிரசார வெற்றியில் திளைத்திருக்கும் அரசினதும் இராணுவ ஆயுதக் குழுக்களினதும் கட்டுப்பாட்டில் மக்கள் கைதிகளாக விடப்பட்டிருப்பதை யாவரும் அறிவார்கள். அந்த மக்களிடம் இந்தத் தேர்தல் திணிக்கப்பட்டிருந்தது.
நடைபெற்று முடிந்த இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி முதலான கட்சிகள் போட்டியிடவில்லை. அதற்கான காரணங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் ஆணையகத்திற்கும் மக்களுக்கும் தெரிவித்திருந்தது. அந்த அம்சங்கள் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
இராணுவம் மற்றும் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் கடத்தல், கொலைகளுக்கும் மத்தியில் அரசின் சர்வ அதிகாரங்களும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பாவிக்கப்பட்டு இத் தேர்தல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இத்தனை பலப் பிரயோகத்திற்குள்ளும் கணிசமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டைகள் திரட்டப்பட்டமையும், கற்கை கற்றையாகவே வாக்குகள் காணப்பட்டன என்பதும் கசிந்து வருகின்றன. வாக்காளர் அச்சுறுத்தப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகளும் வந்துள்ளன. இச் செயற்பாடுகள் தொடர்ந்தும், எதிர்காலத்திலும் இந்த அரசு தேர்தல்களை இப்படித்தான் நடத்தப்போகின்றதென்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த இலட்சணத்தில் ஒரு மோசடியான முறையில் மட்டக்களப்பு மாவட்டத் தேர்தலை நடத்திவிட்டு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் மக்கள் அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்கிவிட்டனர் என்றும் அரசு அறிவித்திருப்பது நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் திட்டமிட்ட செயல் என்றே நாம் கருதுகின்றோம்.
அரச ஆதரவு ஆயுதக்குழுக்களை எதிரும் புதிருமாகத் தேர்தல் களத்தில் இறக்கி மோசடி நிறைந்த வாக்களிப்பொன்றின் ஊடாக ஓர் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றுவதில் அரசாங்கம் வெற்றிகண்டிருந்தாலும் உண்மையில் நடந்தது என்ன என்பதை எமது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்கறிவார்கள்.
எமது இனத்தின் நீண்ட ஓர் இலட்சியப் பயணத்தில் இத்தகைய இடர்களையும் தடைகளையும் தாண்டி இறுதியில் எம் இனம் வெற்றியீட்டும் என்பதில் அசைக்கமுடியாத உறுதியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.