* மே இரண்டாம் வாரத்தில் வாக்களிப்பை நடத்த யோசனை
கிழக்கு மாகாண சபைக்கு இம்மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை வேட்புமனுவை கோருவதற்கும் மே இரண்டாம் வாரம் தேர்தலை நடத்துவதற்கும் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதனைத் தேர்தல்கள் தொடர்பான சிரேஷ்ட அதிகாரி பந்துல குலதுங்க உறுதிப்படுத்தினார்.
கிழக்கு மாகாண சபை வேட்பு மனுக்கோரும் திகதியை இன்று 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவிற்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுகுறித்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியாகவிருந்தது.
மே மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் வெசாக் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக மேமாத இரண்டாம் வாரத்தில் தேர்தலை நடத்தவும் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஐ.தே.க.அடுத்தவாரம் தேர்தல் தொடர்பில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளுமென அக்கட்சியின் எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் கிழக்கு மாகாண பள்ளிவாசல் சம்மேளனம், கிழக்கு மாகாண ஐம்மியதுல் உலமா சபை மற்றும் மாகாணக் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி தேர்தலில் தனித்து அல்லது கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்படுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி எம்.பி.தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது 50 க்கு 50 ஆக காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சந்திரகாந்தன், சந்திரநேரு தெரிவித்ததுடன் அடுத்தவாரம் இது பற்றித் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்குமெனவும் குறிப்பிட்டார்.