-பி.ரவிவர்மன்-
தலைநகர் கொழும்பின் பல பகுதிகளிலும் நேற்று வியாழக்கிழமை குண்டுப் புரளி தொடர்பான வதந்திகள் பரவியதையடுத்து பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் கொழும்பு-15, முகத்துவாரம் இந்துக் கல்லூரிக்கு அருகில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக முகத்துவாரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியூடான போக்குவரத்துகள் உடனடியாக துண்டிக்கப்பட்டன.
பாடசாலைக்குள்ளிருந்த மாணவர்கள் அச்சத்துடனும் அழுதவாறும் காணப்பட்ட நிலையில், பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மாணவர்களின் பெற்றோர்களும் அழுதவாறு பரபரப்புடன் அப்பகுதியெங்கும் பெருமளவில் குழுமி நின்றதைக் காணக்கூடியதாகவிருந்தது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு காணப்பட்ட சிறிய தகரத்திலான பெட்டியொன்றை செயலிழக்க வைத்தனர்.
குண்டு செயலிழக்க வைத்த போது பாரிய சத்தம் ஏற்பட்ட போதும் குறிப்பிட்ட சிறியரகப் பெட்டியில் காகிதாதி போன்ற பொருட்களே காணப்பட்டதாகவும் குண்டுகள் எதுவும் இருக்கவில்லையென்றும் முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்துவாரம் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள சிற்றுண்டி விற்பனை செய்யும் சிறிய பெட்டிக்கடையொன்றுக்குள்ளேயே இச்சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவத்தையடுத்து அரைமணி நேரத்திற்கும் மேலாக இப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
ஹெட்டியாவத்தை
கொழும்பு கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தை சந்திக்கு அருகிலும் நேற்று பிற்பகல் குண்டுப் புரளியொன்று காரணமாக பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஹெட்டியாவத்தையிலுள்ள `ருபாய்கோ' நிறுவனத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் பஸ்ஸொன்றுக்குள் குண்டு காணப்படுவதாக பரவிய வதந்தியையடுத்து பஸ் நிறுத்தப்பட்டு பயணிகள் அங்கிருந்து அவசரஅவசரமாக வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து, படையினரும் பொலிஸாரும் அப்பகுதிக்கு அவசரஅவசரமாக வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது அது வெறும் வதந்தியென்று தெரியவந்துள்ளது.
இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தாமதப்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
இதேவேளை, நேற்று நண்பகல் வெள்ளவத்தை, இரத்மலானை ஆகிய பகுதிகளிலும் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக புரளிகள் கிளம்பிய போதிலும் அவை வதந்தியென்று பின்னர் தெரியவந்தது.