* கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்து ஆளும் கட்சி அறிவிப்பு
-எம்.ஏ.எம்.நிலாம்-
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தும் பொருட்டு விரைவில் வேட்பு மனுக்களைக் கோருமாறு தேர்தல் ஆணையாளரைக் கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம். ஆளும் கட்சி விடுதலைப் புலிகளையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தவிர எவருடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் வேட்பு மனுக்குழுவை நியமித்திருப்பதாகவும் அதில் சுசில்பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அமைச்சரும் ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
அமைச்சரவைத்தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி தேர்தலை அரசு நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தியுள்ளது. எதிர்க்கட்சித்தரப்பின் குற்றச்சாட்டை அரசு முற்றாக நிராகரிக்கின்றது. வாக்களிப்பில் ஊழல், மோசடிகள் எதுவுமே நக்கவில்லை. அரசு முடிந்தளவு நேர்மையுடன் தேர்தலை நடத்தியது.
அடுத்த கட்டமாக மே மாதத்துக்குள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி கிழக்குமாகாண மக்களுக்குத் தமது பிரதி நிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க விருக்கின்றோம். தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டிருக்கின்றார்.
கிழக்கு மக்களின் ஜனநாயக வாக்குரிமையைப் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அரசாங்கமும், ஜனாபதிபதியும் உறுதிபூண்டிருக்கின்றது. மட்டு, உள்ளூராட்சித் தேர்தலைப் போன்றே கிழக்கு மாகாணசபைத் தேர்தலையும் நேர்மையாகவும், சுயாதீனமாகவும் நடத்திக்காட்டுவோம். கிழக்கு மக்கள் இன்று அரசின் நடவடிக்கைகளில் பூரண நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
எதிர்ப்புக் கோஷங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அரசு பயப்படப் போவதில்லை. ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துள்ள ஏனைய கட்சிகளுடன் ஜனநாயக வழியில் செயற்படும் எந்தக் கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயாராவிருகின்றோம். ஆனால், விடுதலைப் புலிகளையோ, ஐக்கிய தேசியக் கட்சியையோ எந்தச் சந்தர்ப்பத்திலும் இணைத்துக் கொள்ளப் போவதில்லை. ஜனநாயக ரீதியில் அரசை விமர்ச்சிக்கும் கட்சிகளும் தாராளமாக தம்மோடு இணையலாம். இல்லாவிட்டால் அவை தனித்துப் போட்டியிடலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும்.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு (இன்று) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் கூடவிருக்கின்றது. கட்சியின் 18 ஆவது வருடாந்த மாநாடு இம்மாதம் 30 ஆம் திகதி நடத்தப்படவிருக்கின்றது. இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கட்சி பகிரங்க அறிவிப்பை விடுக்க விருக்கின்றது. வேட்பாளர் விபரங்கள் கூட அன்றைய தினம் வெளியாகலாம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையிலான குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவும் இடம்பெற்றுள்ளார். கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவில் மேற்கூறப்பட்டவர்களுடன் ஜோன் செனவிரத்ன, அநுர பிரியதர்ஷண யாப்பா ஆகியோருடன் நானும் இடம்பெற்றுள்ளேன்.
இந்தத் தேர்தலை எந்த விதமான பயமுமின்றி நாம் எதிர் கொள்ளத் தீர்மானித்துள்ளோம். தைரியமிருந்தால் எம்மை எதிர்க்கும் சக்திகள் போட்டியிட முன்வரவேண்டுமென நாம் சவால் விடுக்கின்றோம். போலிக் காரணம் கூறுவதை விடுத்து முடிந்தால் கிழக்கு மக்களின் ஆணையைப் பெற்றுக்காட்ட முன்வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறோம்" என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.