இந்திய டெஸ்ட் தொடருக்கான தென்ஆபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர்களான கலிஸ், பவுச்சர், நிற்னி மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிப்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வரும் தென்ஆபிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.முதல் டெஸ்ட் 26 ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதற்கான தென்ஆபிரிக்க அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த, பலம் குன்றிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கலிஸ், பவுச்சர், நிற்னி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மூவரும் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். இவர்களது வருகை இந்தியாவுக்கு கடும் சவாலைத் தரக்கூடும். ஏற்கனவே சச்சின் உள்ளிட்ட 7 வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் இந்தியாவுக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது.
`வேகப்புயுல்' நிற்னி வரவால் தென்ஆபிரிக்காவின் பந்து வீச்சு அசுர பலம் பெறுகிறது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்ரைடனும் நல்ல போர்மில்' உள்ளார். அடுத்த `அலன் டொனால்ட்' என வர்ணிக்கப்படும் இவர், தென்ஆபிரிக்கா கடைசியாக பங்கேற்ற மூன்று டெஸ்ட் தொடர்களிலும் (நியூசிலாந்து, மேற்கிந்திய, பங்களாதேஷ்), `தொடர் நாயகன்' விருது வென்றுள்ளார். 20 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திச் சாதித்துள்ளார். அன்ட்ரூ நெல் நீக்கப்பட்டு, `ஸ்விங்' பந்துவீச்சில் கில்லாடியான லாங்கிவெல்ட் வாய்ப்பு பெற்றுள்ளார்.
`கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை' கிப்ஸ் இம்முறை இடம் பெறவில்லை. மோசமான `போர்ம்' காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் கூட இவர் வாய்ப்பு பெற முடியவில்லை. அதிரடி ஆட்டக்காரரான இவர் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமான விடயம்.
இந்திய ஆடுகளங்களை மனதில் வைத்து ரொபின் பீற்றர்சன், போல் ஹாரிஸ் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சுழலில் மிரட்டிய பீற்றர்சன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதே டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு 415 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த கப்டன் ஸ்மித், நீல் மெக்கன்சி இந்திய தொடரிலும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துணைக்கப்டனாக ஆஷ்வல் பிரின்ஸ் தொடர்கிறார்.
இந்தத் தொடருக்கான அணியை முதலில் அறிவித்த போது, நான்கு கறுப்பின வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இதற்கு தென்ஆபிரிக்க கிரிக்கெட் சபைத் தலைவர் நார்மன் அரண்ட்சே கடும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்தார். இது தொடர்பாக சபையின் பொதுக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
கறுப்பின வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பின்னர் ரொபின் பீற்றர்சன் சேர்க்கப்பட பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனை உணர்ந்து இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள 14 பேர் கொண்ட அணியில் நிற்னி, ஹஷிம் ஆம்லா, பிரின்ஸ், டுமினி, ரொபின் பீற்றர்சன், லாங்கிவெல்ட் என 6 கறுப்பின் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணி வருமாறு:
கிரேம் ஸ்மித் (கப்டன்), ஆஷ்வல் பிரின்ஸ் (துணைக் கப்டன்), ஹஷிம் ஆம்லா, மார்க் பவுச்சர், டிவிலியர்ஸ், டுமினி, போல் ஹாரிஸ், கலிஸ், லாங்கிவெல்ட், நீல் மெக்கன்சி, மோர்னே மார்க்கல், நிற்னி, ரொபின் பீற்றர்சன், டேல் ஸ்ரைன்.