பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற தென்ஆபிரிக்க அணி தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
பங்களாதேஷில் விளையாடும் தென்ஆபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2 ஆவது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி, வேகப்பந்து வீச்சாளர் அண்ட்ரூ நெல்லின் ஆவேசத்தால் சரிவுக்குள்ளானது. 18 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதில் 3 விக்கெட்டுகளை நெல் சாய்த்தார். இருப்பினும், அணியை ரகிப் ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் பொறுமையாக ஆடி சரிவிலிருந்து மீட்டனர்.
இவர்கள் 5 ஆவது விக்கெட்டுக்கு 119 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். ஒரு அணிக்கு எதிராக 5 ஆவது விக்கெட்டுக்கு பங்களாதேஷ் இணை எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். இதற்கு முன், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன்- அஷ்ரபுல் ஜோடி கடந்த ஆண்டு கனடாவுக்கு எதிராக 116 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சாதனை ஜோடி பிரிந்த பின் பழைய நிலைக்கு திரும்பிய பங்களாதேஷ் அணி 48.2 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ரகிம் ஹசன் 63 ஓட்டமும் அல் ஹசன் 52 ஓட்டமும் எடுத்தனர்.
தென்ஆபிரிக்க தரப்பில் நெல் 4 விக்கெட்டுகளையும் லாங்வெல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் ஆடிய தென்ஆபிரிக்க அணி, கிப்ஸ் (3 ஓட்டங்கள்), ஆம்லா (16 ஓட்டங்கள்), கப்டன் ஸ்மித் (28 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகமாக இழந்து நெருக்கடிக்குள்ளானது. இதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
தென்ஆபிரிக்க அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 69 ஓட்டங்களும் (112 பந்து), டுமினி 49 ஓட்டங்களும் (93 பந்து) எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை 2-0 என்று தென்ஆபிரிக்கா கைப்பற்றிவிட்டது. 27 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று வெள்ளிக்கிழமை டாக்காவில் நடக்கிறது.
இந்தக் கடைசிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றால் ஐ.சி.சி. தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.