* தொடரும் இரு பிரதான கட்சிகளின் சங்கீதக் கதிரை விளையாட்டு
காலகண்டன்
கடந்த பத்தாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் காலத்திலும் அன்றைய தினத்திலும் எதிர்பார்க்கப்பட்ட பெரும் வன்முறைகள் இடம்பெறவில்லை என்பது அவதானிகளின் கணிப்பு. இதற்கான அடிப்படைக் காரணம் வாக்காளர்களையும் வாக்குகளையும் பங்குபோடக் கூடிய பிரதான தேர்தல் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் மேற்படி தேர்தலில் போட்டியிடவில்லை என்பது கவனத்திற்குரியதாகும். ஆதலால் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் முக்கிய சுயேட்சைக் குழுவும் அரசாங்கத்தோடு இணைந்தவைகளேயாகும். ஆதலால் மோதல்களுக்கும் வன்முறைக்குமான களம் தாழ் நிலையிலேயே இருந்தது. அதேவேளை, வாக்காளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாகவே மக்கள் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது. அச்சம், பீதி நிலவியதால் தான் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் ஐம்பது வீதத்தினர் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அத்துடன் வழமையான `ஜனநாயகத் தேர்தலில்' இடம்பெறக் கூடிய தில்லு முல்லுகள் யாவும் செயலாக்கப்பட்டிருப்பதாகவே நம்பப் படுகிறது. இதனை வாக்குகளைக் குறைவாகப் பெற்ற அரசாங்க ஆதரவுக் கட்சிகளே குற்றச் சாட்டாக முன்வைத்தும் உள்ளன. கள்ளவாக்குகள் போடப்பட்டதுடன் இரகசிய மிரட்டல்கள் தாராளமாக இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கிழக்கின் தேர்தலை அரசாங்கத் தரப்பும் அவர்களோடு இணைந்தவர்களும் சேர்ந்து ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனப் பரப்புரை செய்கின்றனர். கிழக்கில் ஜனநாயகம் மீட்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதன் பாதையில் விரைவாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அரசாங்கம் வெற்றிக் களிப்புரைகள் ஆற்றி வருகின்றது. இந்த ஜனநாயக மீட்பும் நிலை நிறுத்தலும் கிழக்குடன் நின்று விடாது என்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட இருப்பதாகவும் ஜனாதிபதி உறுதியுரை வழங்கி உள்ளார்.
இப்பொழுது இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலும் அடுத்து வரப்போகும் மாகாண சபைத் தேர்தலும் கிழக்கில் ஜனநாயகத்தை மட்டுமன்றி அபிவிருத்தியையும் கொண்டு வந்து நிறுத்தப் போவதாகப் பலூன் ஊதிக்காட்டப்படுகிறது. இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இருந்து வருவதையும் அதன் காரணமாக யுத்தம் நடைபெற்று வருவதும் மறைக்கப்படுகிறது. யுத்தம் என்பது இனப்பிரச்சினை காரணமாக இடம்பெறும் ஒன்றல்ல என்றும் அது பயங்கரவாதப் பிரச்சினை தான் எனவும் அரசாங்கத்தால் வியாக்கியானம் அளிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கில் தேர்தல்களும் வடக்கில் இராணுவ முன்நகர்வுகளும் என்ற இருமுனை நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவே உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் எடுத்துக் காட்டப்பட்டு வருகின்றது. இந்த மகிந்த சிந்தனை மூலமான பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க கொள்கை வகுப்பாளர்களின் மேற்படி இரட்டைத் தந்திரோபாயம் தெற்கின் சிங்கள மக்களை மௌனமாக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வானளாவ உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பைப் பற்றி எவ்வித எதிர்ப்பையோ கண்டனத்தையோ வெளிப்படுத்தாத நிலை சிங்கள மக்கள் மத்தியில் நீடித்து வருகின்றது. இதற்கான காரணம் அரசாங்கம் தேர்தல் மூலமும் இராணுவ நடவடிக்கை மூலமும் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையினாலேயே ஆகும். சிங்கள மக்கள் நன்கு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கு அப்பால் எதைத்தான் கூற முடியும்.
இதனால் தான் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறாது பிசுபிசுத்தும் வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் ஒவ்வொரு அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளும் அடுத்து அதிகாரத்திற்கு வரும் நோக்கிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. இத்தகைய ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் பெருமளவிலான மக்கள் அணி திரளாத நிலை காணப்படுகின்றது என்றால் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த கால மோசமான மக்கள் விரோத செயற்பாடுகளையும் மறந்து விடவில்லை என்பதும் மற்றொரு காரணமாகும்.
மேலும், கிழக்கில் நடந்து முடிந்த தேர்தலில் பங்கு கொள்வதை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலின் மறுநாள் கொழும்பில் தேர்தல் ஆணையாளர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தது. நீதியான தேர்தல் மட்டக்களப்பில் இடம்பெறவில்லை என்றும் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த கருணா - பிள்ளையான் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் நடாத்திய தேர்தல் சுதந்திரம், ஜனநாயகம் அற்றது என்றும் கூறி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டது. ஆனால் இன்று கருணா - பிள்ளையான் குழுவை பயங்கரவாதிகள் என்று கூறும் ரணில் விக்கிரமசிங்க தான் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா குழுவை வெற்றிகரமாகப் பிரித்து எடுத்து புலிகளைப் பலவீனப்படுத்திக் கொண்டதாக புகழாரம் சூட்டப்பட்டார். அவரது அரசாங்கம் தொடர்ந்திருந்தால் அந்தக் குழுவுடன் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் இணைந்து நின்றே செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது. இதுதான் பாராளுமன்ற ஜனநாயக சந்தர்ப்பவாத அரசியலாகும்.
மேலும், தங்களால் நிராகரிக்கப்பட்ட தேர்தலை ஊழலும் மோசடியும் நிறைந்தது எனக் கூறிய மறுநாள் எதிர்வரும் கிழக்கின் மாகாண சபைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஏன் இத்தகைய சந்தர்ப்பவாத நிலைப்பாடு. கிழக்கின் தமிழ் மக்களுக்காக கண்ணீர் வடிப்பது போன்று நடித்து விட்டு இப்போது அக் கண்ணீரைத் துடைத்துவிட்டு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பங்கு கொள்ளப் போவது அதிகாரத்திற்கும் வாக்குப் பலத்தை விஸ்தரிக்கவும் தான் என்பது தெளிவானதாகும்.
இவ்வாறான அரசாங்கத் தரப்பும் பிரதான எதிர்க்கட்சியும் பாராளுமன்ற அரசியலில் நீடிக்கும் வரை இந்நாட்டின் தேசிய இனப் பிரச்சினை உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் மக்கள் எதிர்பார்க்கும் நியாயமான தீர்வுகள் எதுவும் ஏற்படப் போவதில்லை. மாறி மாறிச் சங்கீதக் கதிரை விளையாட்டுத்தான் தொடரும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பும் இணக்கப்பாட்டிற்கு வருவது ேபான்று பேச்சுவார்த்தை நடத்துவதும், பின் எதிரெதிரே நின்று கச்சை கட்டி மல்லுக்கு நிற்பது போன்று போக்குக் காட்டுவதும் மக்களை ஏமாற்றும் முயற்சிகளே அன்றி வேறெதுவும் இல்லை. அடிப்படையில் பேரினவாதமும் முதலாளித்துவமும் உலகமயமாதல் நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு விசுவாசமும் என்பனவற்றில் இவர்கள் ஒரே கயிற்றில் தான் நடந்து செல்கிறார்கள்.
இத்தகைய ஒரு நெருக்கடிச் சூழலில் தான் இந்திய அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் காய் நகர்த்தல்களும் நகர்வுகளும் வேகமடைந்து வருகின்றன. எத்தகைய ஜனநாயக பண்பாட்டு நாகரிகப் போர்வைகளைப் போர்த்தினாலும் இந்தியா தென்னாசியப் பிராந்தியத்தின் பெரிய அண்ணன் தான் என்பது மறுக்க முடியாது. அதன் சுய ரூபம் பிராந்திய மேலாதிக்க வல்லரசு தான். இது இந்திய ஆளும் வர்க்க கொள்கை வகுப்பாளர்களின் மூலோபாயம் என்பதில் எவருக்கும் ஐயம் வரமுடியாது. இலங்கை என்ற தீவு நாட்டைப் பொறுத்தும் இந்தியாவின் ஆளும் வர்க்க நிலைப்பாடு கொலனியச் சிந்தனை கொண்டது தான். அதன் பொருளாதார அரசியல் இராணுவ பண்பாட்டுத் துறைகளிலான ஊடுருவல்கள் இலேசானவைகள் அல்ல. அண்மைக் காலங்களில் அவற்றின் வளர்ச்சிகளை கூர்ந்து அவதானித்தால் நன்கு புரிந்து கொள்ளமுடியும்.
இவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவின் அண்மைக்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது நெருங்கிய கொள்கை வகுப்பாளர்களும் இந்தியாவைச் சார்ந்து நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர். அவ்வப்போது செய்யப்படும் பொருளாதார ஒப்பந்தங்களும் வர்த்தக விரிவாக்கல் முயற்சிகளும் இந்திய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்து வருகின்றன. அவற்றுக்கு தாராள இடம்வழங்குவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் தமக்குத் தேவையான இராணுவ உதவிகளைத் தாராளமாகப் பெற்றுக்கொள்ள முயன்று வருகின்றது என்பது வெளிப்படையானதாகும். அண்மையில் ஆறு நாட்கள் உத்தியோக பூர்வப் பயணமாக இலங்கையின் இராணுவத் தளபதி இந்தியா சென்று திரும்பியுள்ளார். அவர் தனது பயணத்தின் நோக்கங்கள் பயன் தருவதாக அமைந்திருந்தமை பற்றி திருப்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடற்படை, விமானப் படைத்தளபதிகள் என்போர் இந்தியா சென்று திருப்தியுடன் திரும்பியிருந்தனர்.
இந்தியா வலக்கையால் இராணுவ செயற்பாட்டிற்கு உதவி வரும் அதேவேளை, இடக்கையால் அரசியல் தீர்வுக்கு பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்தி வருகின்றது. அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழு மனதோடு இல்லாவிடினும் இந்திய அழுத்தத்திற்கு இணங்கிப் போக வேண்டியே உள்ளது. இருப்பினும் தமது பேரினவாத நிலைப்பாட்டிற்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதில் அரசாங்க கொள்கை வகுப்பாளர்களும் ஜனாதிபதியும் இருந்து வருகிறார்கள் என்பது பகிரங்கமானதாகும்.
அதுவே பிரிக்கப்பட்ட கிழக்கில் அதிகாரம் குறைந்த மாகாண சபையும் வடக்கில் ஆளுநருக்கான ஆலோசனை சபையும் என்று கூறப்படுகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ள மேற்படி ஆலோசனைகளைக் கூட ஜே.வி.பி.கடுமையாக எதிர்த்து வருகின்றது.
அக்கட்சி சிங்கள மக்கள் மத்தியில் சகல நிலைகளிலும் செல்வாக்கு இழந்து வரும் சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள உள்ள ஒரே வழி பேரினவாதத்தை தீவிரப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதையே அவர்களது நிலைப்பாடு எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கையின் யுத்தமாக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினையில் இருதரப்பினரும் பட்டு அனுபவித்த பின் என்னிடமே வர வேண்டும் என்ற நிலையிலேயே இந்திய ஆளும் வர்க்கத்தினர் தூர இருந்து அவதானித்து வந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை இப்போது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. தமிழர் தரப்பின் ஒரு பிரிவினரும் இந்தியாவின் தலையீட்டை வற்புறுத்தி வருகின்றனர். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது பெரியண்ணன் பாத்திரத்தை மிகவும் கச்சிதமாக முன்னெடுப்பதில் இந்தியா மீண்டும் களத்தில் இறங்கி நிற்கிறது.
தமிழ்நாட்டில் ஒலிக்கப்படும் எந்த எதிர்ப்புக் குரலுக்கும் இந்திய மத்திய அரசு செவிசாய்க்கப் போவதில்லை . ஏற்கனவே, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவு தான் தமது முடிவாக இருக்கும் என்பதைக் கருணாநிதி அழுத்தமாகக் கூறியிருந்தார். அதனை மாற்றி தமிழகத்தின் முடிவு தான் மத்திய அரசின் முடிவாக இருக்க வேண்டும் எனக் கூறுமாறு அண்மையில் தினமணி நாளிதழ் வற்புறுத்தியிருந்தது.
அதேபோன்று, இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை சில கட்சிகள் செய்தும் வருகின்றன. இவை யாவும் தமது ஆத்ம திருப்திக்கும் வரப்போகும் தேர்தல்களில் வாக்குச் சேகரிப்பதற்கும் உதவக் கூடியனவே தவிர, மத்திய அரசின் நிலைப்பாட்டை சிறு அளவுக்குத்தானும் அசைக்கப் போவதில்லை.
அதேவேளை, அமெரிக்காவின் நிலைப்பாடு இந்தியாவின் நோக்கிற்கும் போக்கிற்கும் உடன்பாடான வகையில் இருப்பதாகவே வெள்ளை மாளிகையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் தத்தமது நலன்களை மையப்படுத்தியே செயலாற்றி வருகின்றன.
உதாரணத்திற்கு இந்திய- அமெரிக்க அணுசக்தி 123 ஒப்பந்தம் நிறைவேறுவதைப் பொறுத்தும் அமெரிக்காவின் போக்கை எடைபோட முடியும். இந்தியா தமது நாட்டு எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கி விலகினால் அமெரிக்கா இலங்கை இனப்பிரச்சினையை உக்கிரப்படுத்தும் வழிவகைகளில் இறங்கவே செய்யும். அதற்கு முன்னோடியாகவே இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி விபரித்தும் கண்டித்தும் கூறப்பட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும்.
எவ்வாறாயினும், இனப்பிரச்சினையின் ஊடாக இலங்கையின் தலைவிதியைப் தீர்மானிக்கப்போவது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் கைகளேயாகும். இதன்மூலம், இலங்கை,