Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஆண்மையும் பெண்மையும்
[15 - March - 2008] [Font Size - A - A - A]
எமது வாழ்க்கையின் முடிவு மனக்குவிவேயாகும். வாழ்வாங்கு வாழ வேண்டிய ஆணும் பெண்ணும் நடத்தும் நல் வாழ்க்கையிலேயே மனக்குவிவு தங்கியுள்ளது. பிறந்து பல வித்தைகளும் பயின்று, காதலித்து புதுமணம் வீசி , மகப்பேறு காணும் தன்மையையே மனக்குவிவு எனலாம்.

சீரான, ஒழுங்கான வாழ்க்கையில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் இயல்பான வழியிலே வாழ்வாங்கு வாழ்ந்து மனக்குவிவை ஏற்படுத்துவர். இன்று எம்மிடையே உள்புற அமைதியின்மை தலைவிரித்தாடுகின்றது.

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் நடப்பதில்லை. ஆதலால் ஆண்மை, பெண்மை இரண்டையும் ஆண், பெண் இரு பாலாரிடமும் உருவாக்க வேண்டும். இன்று ஆண்களின் கையோங்கியுள்ளது. இதன் மூலம் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதுமுண்டு. இதன் காரணமாக ஆண், பெண் இருபாலாரிடமும் எதிர்வுணர்வுகள் தலைவிரித்தாடுகின்றன. அன்புடன் பின்னிப் பிணைய வேண்டிய ஆண்மையும் பெண்மையும் ஒன்றையொன்று எதிர்க்கிறது. வீரமும், காதலும் இன்று ஒன்றையொன்று விழுங்குகின்றது. போர்க்களத்தில் வீரத்தை நிரூபிக்க வேண்டிய ஆண் இன்று தன் கைவரிசையை வீட்டினைக் களமாக்கிப் போரிட முனைகிறான். காதலித்து அல்லது பேசிப் புரிந்து மணம் முடித்த ஆண், பெண் இன்று எதிரிகளாகக் காணப்படுவதற்குக் காரணம் ஆண், பெண்ணை ஒடுக்குவதும் பெண் ஆண்மையைப் பெற முற்படுவதுமாகும்.

பெண்மையினால் ஆண்மையைக் கவர வேண்டிய பெண்மை இன்று ஆண்மை அவாவி ஆண்களின் இடத்தைக் கவர முற்படுகிறது. எனவே, வாழ்க்கையானது போராட்டமாகி ஆண், பெண் என்போர் ஒருவரை ஒருவர் வெல்ல நடாத்தும் போட்டியாக மாறியுள்ளது. எனவே, ஆண்மை, பெண்மை என்பவற்றின் சிறப்பை அவரவர் உணர வேண்டிய தருணமும் இதுவே. ஆணாக மாறிவிடுவதனாலோ ஆண்களின் இடத்தைப் பெண்கள் கவர்ந்துவிடுவதனாலோ பெண்கள் முன்னேறிவிடுவர் எனக் கருதமுடியாது அல்லது ஆண்களின் உத்தியோகங்களைப் புரிவதன் மூலம் பெண்கள் ஆண்மையடைந்து விட முடியாது.

இலங்கையை ஆண்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, எலிசபெத் மகாராணி போன்றோரின் உயர்வுக்கு காரணம் என்ன? ஆண்மையின் இடத்தை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட புதுமை உணர்ச்சி. அவர்களின் புகழ்ச்சிக்கு காரணமாயிற்று. அதற்காக அவர்கள் ஆண்மையடைந்து விட்டார்கள் எனக் கூறமுடியாது. பெண்மை நிலையில் இருந்தவாறே ஆண்மையின் தன்மையை உலகுக்கு உணர்த்தினார்கள். பொதுக் கருத்துகளும் சமூக சமய விதிமுறைகளில் கூட பெண்களை இரண்டாவது நிலையில் கீழ்ப்படிந்த நிலையில் வைக்கின்றன.

ஒடுக்குமுறை மறைந்த ஆணாதிக்கங்களைச் செறிவாக இங்கு காணக்கூடியதாக உள்ளது. பெண்ணுடைய சமய, சமூக , அரசியல் , பொருளாதார அடையாளங்கள் ஆணால் உருவாக்கப்பட்டு வடிவமாக்கப்படுகின்றன. இவற்றைச் செய்யும் அதிகாரம் தமக்குண்டு என ஆண் தன்னிலைவாதிகள் நியாயம் தேடுகின்றனர். ஆண்மையில் ஒவ்வொரு செயற்பாடும் பெண்மை மீதான ஒடுக்குமுறை மேலாதிக்கத்தைத் தொடர்கிறது.

இந்த நிலைமையானது ஆண்மைச் சமூகத்தின் இயல்பு நிலையாகக் கருதப்படுகிறது. ஆணாதிக்கம் என்பது பெண்ணை அடிமைப்படுத்தி ஒடுக்கி அதனைச் செயற்படுத்தும் ஒரு கருவியாக ஆணைத் தொடர்ந்து இருக்கச் செய்கிறது. ஆணானது பெண்ணின் எதிர்நிலையாக இருந்து பெண்ணைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தி காவல் செய்வது தண்டனை தரும் இயந்திரமாகக் கூடச் செயற்படுகிறது. இந்த நிலைமை மாறி பெண்கள் தங்கள் பெண்மையை வெளிப்படுத்த ஏற்ற சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

பெண்மை பற்றிய மூன்று நிலைப்பாடுகள் உள்ளன. பெண்ணானவள் ஆணுக்கு கீழானவள். அவள் அடங்கியும், கட்டுப்பட்டும் கீழ்ப்படிந்தும் இருக்க வேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது பெண் அடிமையாகவல்ல. சுதந்திரமாகவே செயற்படுகிறாள். பெண்ணுக்குரிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது. பெண்கள் விரும்பியே அடங்கியும் படிந்தும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுதந்திரம் வழங்கினாலும் அதைக் கையாளத் தெரியாது என்னும் நிலைப்பாடும் உள்ளது.

இதில் இரண்டாவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவளுக்குரிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவள் சுதந்திரமாகவே செயற்படுகிறாள். அவள் அடிமையல்ல என இன்று பெண்மை பல நாடுகளில் நிரூபித்துக் காட்டியுள்ளது.

ஆண், பெண் இரண்டும் இயற்கை எதிரிடையாக கலாசார எதிரிடைகளாக இருக்கின்றன. இயற்கை எதிரிடை என்னும் போது உயிரியல் , உடலியல் வேறுபாடுகளைக் குறிக்கும். இந்த வேறுபாடுகள் இயற்கையாக எதிரிடைகளாகக் காணப்படுகின்றன. ஆனால், கலாசார எதிரிடைகள் புனைவுகளால் உருவானவை. ஆணின் உடல் பலமானது. பெண்ணின் உடல் பலம் குறைந்தது என்று கூறுவாருமுளர். மனிதனை விட பலமான மிருகங்கள் இல்லையா? அடிமைகளாக இருந்த கறுப்பு இனத்தவர்களிடம் உடல் வலிமை , பலம் என்பன அவர்களை ஆதிக்கம் செய்தவர்களிலும் பார்க்கக் கூடுதலாக இருந்தது. உடல் வலிமை, பலம் என்பன ஆதிக்கம் , அதிகாரம் என்பவற்றுக்குத் தேவையில்லை. எதற்கும் எமது அறிவாற்றலே இதற்கு முக்கியம். எனவே, பெண்ணின் மீதான ஆணின் மேலாதிக்கம் அதிகாரம் என்பன புனைவுகளால், கலாசார எதிரிடைகளால் ஏற்பட்டன . இப்புனைவுகளால் மைய இடத்தை ஆண்மை பெறுகிறது. இதனால், பெண் தனித்திருப்பதையும் நியாயத்தையும் கோர வழிவகுக்கிறது.

உலகைப் புரிந்து கொள்ளும் அறிவு என்பது ஆண்மைத் தன்மையிலிருந்து உருவாகி தனது மேலாதிக்க நிலையை எடுத்துக் கொள்கிறது. இதனால் பெண்ணுறவு நிர்ணயிக்கக் கூட முடியாத நிலையிலுள்ளது. உதாரணமாக நிலத்தையும், பெண்ணையும் எடுத்துக் கொள்வோம். ஆணானவன் நிலத்தை எல்லைப்படுத்துதலையும் , பெண் உடலை எல்லைப்படுத்துதலையும் தன் உரிமையாக பாதுகாப்பு உத்தியாகக் கொள்கின்றான். நிலத்தைக் கையாள போர், வீரம் என்பன தேவை. ஏனையோரிடமிருந்து நிலத்தைக் காப்பாற்ற வீரம் முக்கியமானது. ஆனால், பெண் உடலைக் கையாள காதலும் காமமும் தேவை. காமத்தில் `கற்பு' என்பது ஒரு உத்தியாகக் கையாளப்படுகிறது. நிலத்தைப் பிறரிடமிருந்து காத்தலும், பெண் உடலை வேறு ஆண்களிடமிருந்து காப்பதும் ஆணின் பொறுப்பாகும். நிலத்தை அபகரிப்பதற்கு வீரம் தேவை.

ஆண் தன் வீரத்தின் மூலம் எந்த நிலத்தையும் ஊடுருவலாம். தனது நிலத்தினுள் இன்னொருவன் ஊடுருவாமல் தடுக்கலாம். நிலம் அசைவற்றது உணர்வற்றது. நிலத்தை அபகரிப்பதில் உள்ள வெற்றியும் தோல்வியும் திறமையைப் பொறுத்தது. ஆனால், பெண் உடலை வேறொரு ஆண் ஊடுருவதைத் தடுக்க பெண்ணானவளிடம் மனோவியல் ரீதியாகக் `கற்பு' என்னும் திண்ணையுடன் போராடுகிறாள். எனவே, அவள் தற்காப்பு ரீதியாகக் கற்பை நிலைநாட்டி வெற்றியடைகிறாள். இதில் ஆணுக்குத் துணையாகப் பெண் உதவ முன் வரலாம். நிலத்தை ஊடுருவாமல் தடுக்கிறான் ஆண். ஆனால், பெண்ணானவள் தனது கற்பின் மூலம் இன்னொருவன் ஊடுருவாமல் தடுக்கிறாள் . இதற்கு அவள் ஆணுக்குத் துணை போகிறாள்.

பேரிலக்கியங்கள் பல ஆண்மையின் சாத்தியமின்மையை, ஆண் நிலையின் மீதான ஐயத்தை ஆணின் முழுமையற்ற தன்மையை எடுத்தியம்பியுள்ளன. ஞானத்தின் அமைதியில் புத்தரின் முகம் பெண்மையடைந்தது. பேரன்பின் தவிப்பில் யேசு மரியின் கையில் மீண்டும் பாலகனாகிறார். ஈசன் உமையின் உடலில் புகுந்து கொண்டு புன்னகை செய்கிறார். மாதவன் காதல் பெண்களின் தலை கோதி, குழாவி பெண்மை வடிய நிற்கிறான். எனவே, இவற்றின் மூலம் பெண்மையின் முக்கியத்துவம் உணரற்பாலது. இப்படியான பெண்மை தன்னுள்ளே பொதிந்துள்ளவற்றைப் பேண வேண்டும். இன்று மனித ஒழிப்பிற்கான வன்முறைகள் ஆண்மையின் மூலம் பூதாகரமாக வெளிப்படுத்தப்படுவதையும் நாம் காணலாம். இந்த நிலைமை மாற வேண்டும். ஆண்மை, பெண்மையையும் போற்ற வேண்டும். ஆண்மையின் மேலாதிக்க அட்டகாசத்தினாற்றான் அவள் விடுதலை வேண்டுகிறாள்.

பலாமரத்தில் மாங்காய் காய்த்தால் அது புதுமையாக இருக்கும். விஞ்ஞானிகள் ஆராய்வில் குதித்துவிடுவர். பலாமரத்தில் பலாக்கா தான் கிடைக்கும். மாமரம் தான் மாங்காய் தரும். ஆண்மைக்குள் பெண்மை அடங்கிவிடுகிறது. ஆனால், பெண்மை ஆண்மையாக முடியாது. பெண்மை பெண்மை தான். ஆண்மை ஆண்மை தான். எனவே, ஆண்மை ஆண்மையகத்தேயும் பெண்மை பெண்மையகத்தேயும் சேரும். உலகிற்கு ஆண்மையும் பெண்மையும் வேண்டும். இரண்டும் தனித்துவமாகவும், உடன்பாடாகவும் செயற்பட்டாற்றான் நாடு முன்னேறும். எனவே, பெண்களே! பெண்மையுடன் அமைதி பெறுங்கள்.

கட்டுரையாளர்: ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணம், திருகோணமலை.

Email this page Your Opinion Print this page
ஆண்மையும் பெண்மையும்
இலங்கை இன நெருக்கடியில் இந்திய, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் காய் நகர்த்தல்கள் தீவிரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com