பஸ்ஸில் அடிக்கடி பயணிக்கும் அன்பர் ஒருவர், தான் அவதானித்த சிந்திக்க வைக்கக்கூடிய காட்சியை விபரித்தார்.
இவர் பயணித்த ஒரு தனியார் பஸ்ஸில் சாரதியின் ஆசனத்துக்கு அருகில் கண்ணாடியில் ஒரு அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது. "டிக்கெட் பெறாமல் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற வாசகங்கள் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. மற்றொரு தனியார் பஸ்ஸில் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் இதற்கு ஒருபடி மேல் சென்றுவிட்டது. அதாவது, `டிக்கெட் இன்றி பயணித்தால் 100 ரூபா தண்டம், அத்துடன் டிக்கெட் பெறுமதியின் இரு மடங்கு தொகை அறவிடப்படும்" என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது.
வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டு பஸ்களிலும் நடத்துநர்கள் டிக்கெட் வழங்கவே இல்லையாம். கட்டணத்தை மட்டும் வசூலித்து சட்டைப் பைக்குள் போட்டுவிட்டார்கள்!
இந்த அன்பர் இன்னொரு நாள் சிவப்பு பஸ்ஸில் அதாவது அரசாங்கத்துக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்தார். அதில் இத்தகைய அறிவித்தல் எதுவுமே கிடையாது. ஆனால் நடத்துநர் டிக்கெட் வழங்கி கட்டணத்தை வசூலித்தார்.
"தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை, கட்டணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் குரல் எழுப்புகிறார்கள். டிக்கெட் வழங்காமல் நடத்துநர்கள் கட்டணத் தொகையை வசூலித்தால் எப்படிக் கட்டுப்படியாகும்?" என்று அந்த அன்பர் வினவுகிறார்.
இது தனியார் பஸ் உரிமையாளர்களின் கவனத்துக்கு!