அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு செனட்டர் ஹிலாரி கிளின்டன் தெரிவு செய்யப்பட்டால் துணை ஜனாதிபதியாக செனட்டர் பராக் ஒபாமா போட்டியிடலாமென்ற யோசனைகளை ஒபாமா நிராகரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராவதற்காக ஹிலாரி கிளின்டனும் , பராக் ஒபாமாவும் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சி இரு வேட்பாளர்களும் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஹிலாரியின் பிரசாரத்தரப்பு அண்மைக் காலமாக தெரிவித்து வருகிறது.
ஆனால், வேட்பாளருக்கான போட்டியில் தான் முன்னணியில் இருப்பதால் இந்த யோசனைகளில் எவ்வித அர்த்தமும் இல்லையென ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலிலும் இருவரும் போட்டியிடுகின்றனரென்பது குறிப்பிடத்தக்கது.
33 பேராளர்களைக் கொண்ட இம் மாநிலத்தில் ஒபாமா முன்னிலை வகிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மிஸிஸிப்பி மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா;
போட்டியில் இரண்டாவது நிலையிலிருக்கும் ஒருவர் முதல் நிலையிலுள்ள ஒருவருக்கு துணை ஜனாதிபதி பதவியை வழங்குவது எப்படி என்பது எனக்குத் தெரியாது. இங்குள்ள எவரும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டிய தேவையில்லை. இத் தேர்தலில் உங்கள் விருப்பை நீங்கள் வெளிப்படுத்தப் போகிறீர்கள். நான் துணை ஜனாதிபதிக்காக போட்டியிடவில்லை. நான் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்காகவே போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான அனுபவம் ஒபாமாவிடம் போதியளவில் இல்லை என்ற ஹிலாரியின் பிரசாரக் குழுவின் வாதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஒபாமா அதற்கான தகுதி என்னிடமில்லை என்றால் துணை ஜனாதிபதியாக என்னால் எப்படிச் சிறப்பாக செயற்பட முடியுமெனக் கேள்வியெழுப்பியுள்ளார்.