மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பிற்பகல் வேளையில் அடைமழை பெய்து வருகின்றது.
கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் பெய்யத் தொடங்குகின்ற மழை இரவு வரை தொடர்கின்றது.
இந்த அடை மழை காரணமாக கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, நுவரெலியா, அட்டன், பொகவந்தலாவை உட்பட மலையகப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது.
அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அட்டன் பன்மூர் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் இருவரை மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து இந்த இருவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அடை மழை பெய்து கொண்டிருந்த போது அட்டனிலிருந்து தலவாக்கலைக்குச் சென்ற தனியார் பயணிகள் பஸ் ஒன்று கொட்டகலையில் பாதையை விட்டு விலகி மண்திட்டொன்றில் சரிந்ததில் இருவர் காயத்துக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.