* ஐ.ம.சு.மு. முஸ்லிம் பங்காளிகள் மத்தியில் புகைச்சல்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் குதிப்பதற்கான வியூகம் வகுப்பதில் கட்சிகள் மும்முரமாக நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் அதேசமயம் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் மத்தியில் அதிருப்தியும் புகைச்சலும் ஆரம்பமாகியுள்ளதாக அறியவருகிறது.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளினால் உற்சாகமடைந்துள்ள அரச தரப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் ஆரம்பகட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்குப் பொறுப்பாக அமைச்சர்கள் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய கட்சிகளையும் இணைத்து விசாலமான கூட்டணியொன்றை அமைத்து களம் இறங்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் இதற்காக ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கிழக்குக்கு சென்று தொடர் சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலேயே அரசின் அங்கம் வகிக்கும் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் கட்சிகளும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விசாலமான கூட்டணியை அமைப்பதற்கு ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து ஒருவரை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நுஆ, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் மத்தியில் அதிருப்தி தோன்றியுள்ளதாக அறியவருகிறது. இரண்டாவது பெரிய சனத்தொகையுடைய முஸ்லிம் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் அதிருப்தி கொண்டுள்ளன.
வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவிலோ அல்லது தேர்தல் நடவடிக்கை குழுவிலோ ஒரு முஸ்லிம் கட்சிக்கும் இடமளிக்கப்படவில்லையென்பதே இக்கட்சிகளின் விசனமாக காணப்படுகின்றது.
இதனால் சினமடைந்துள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஆத்திரத்தை சிலரிடம் வெளிப்படுத்தியதாகவும் அறியவருகிறது.
மேலும், ஆளும்தரப்பானது ஹெல உறுமய மற்றும் சில தமிழ் கட்சிகளுடன் கூட்டுவைக்க தீர்மானித்துள்ளமையும் முஸ்லிம் கட்சிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இக்கூட்டணியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்த தேர்தல் உடன்படிக்கை மேற்கொள்ள விரைவில் இரு கட்சித் தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சி முக்கியஸ்தர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் இது தொடர்பாக நடைபெற்றுள்ளது.
அடுத்துவரும் சில தினங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.