* செய்திகளை தவிர நேரடி நிகழ்ச்சிகள் நேற்று ஒளிபரப்பாகவில்லை
ரூபவாஹினி கூட்டுத்தாபன உதவி இயக்குநரும் (விநியோகம்) தொழிற்சங்கவாதியுமான ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வெல்லம்பிட்டி கொட்டிகாவத்தை பகுதியில் காடையர் கோஷ்டியொன்றால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
தொடர்ச்சியாக ரூபவாஹினி ஊழியர்கள் தாக்கப்பட்டு வருவதற்கெதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காததற்கும் அரசு இவ்விடயத்தில் மௌனம் சாதித்து வருவதற்கும் ஆட்சேபம் தெரிவித்து நேற்று ரூபவாஹினி ஒளிபரப்பில் செய்திகளைத் தவிர வேறெந்த நேரடி நிகழ்ச்சிகளும் ஒளிரப்பப்படவில்லை.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அமைச்சர் மேர்வின் சில்வா நுழைந்து பெரும் அட்டகாசம் செய்தபோது அவரும் அவருடன் சென்ற சகாக்களும் கூட்டுத்தாபன ஊழியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
இந்த நிலையில், ரூபவாஹினி ஊழியர்களைப் பழிவாங்கும் நோக்கில் அதன் பின் ஊழியர்கள் பலத்த தாக்குதல்களுக்கிலக்காகி வருகின்றனர்.
இது வரை நான்கு ஊழியர்கள் தாக்கப்பட்ட நிலையில் நேற்றுக் கலை 6.30 மணியளவில் வெல்லம்பிட்டி கொட்டிகாவத்தை பஸ் நிலையத்தில் வைத்து, விநியோகப் பிரிவின் உதவி இயக்குநரான அநுரசிறிஹெட்டிகே காடையர் கோஸ்டியொன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இவர் பஸ் நிலையத்தில் நின்றபோது ஆட்டோ ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த நான்கு காடையர்கள் இவர் மீது கடுமையாகத் தாக்கியுள்ளனர். கூரிய இரும்புக் கம்பிகளால் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதில் கழுத்தின் பின்புறப் பகுதியிலும் கழுத்திலும் தாடைப் பகுதியிலும் பலத்த காயங்களேற்பட்டு உடலெங்கும் இரத்தம் வழிந்தோடியுள்ளது.
மிக மோசமான தாக்குதலுக்கிலக்காகி அவர் வீழ்ந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக ரூபவாஹினி ஊழியர்கள் தெரிவித்தனர்.
தலையிலும் கழுத்துப் புற பகுதியிலும் ஏற்பட்ட பலத்த காயங்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதாக தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்த ரூபவாஹினி ஊழியர்கள் உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்தனர். தங்கள் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் அளிக்கப்படும் வரை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து அலைவரிசைகளிலும் செய்திகளைத் தவிர வேறெந்த நேரடி நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படமாட்டாதென அறிவித்ததுடன் நேரடி ஒளிபரப்புகளையும் உடனடியாக நிறுத்தினர்.
முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளே நேற்று முழு நாளும் ஒளிபரப்பாகின.
இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்ததும் அனைத்து ஊடக அமைப்புகளதும் செய்தியாளர்களும் ஒளிப்படப் பிடிப்பாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்களும் அங்கு விரைந்து சென்ற போதும் உள்ளே செல்ல எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர் தொழிற்சங்க முக்கிய பிரமுகரான ஹெட்டிகே மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதமளித்ததுடன் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறமாட்டாதெனவும் ஊழியர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படுமெனவும் உத்தரவாதம் வழங்கும் வரை தங்கள் எதிர்ப்பு நடவடிக்கை தொடருமெனவும் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில், அவசர அவசரமாக ஊழியர் தொழிற்சங்கத்தினரை அழைத்த ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
எனினும், தங்கள் கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அரசு உத்தரவாதம் வழங்கும் வரை தங்கள் எதிர்ப்புப் போராட்டம் தொடருமென ஊழியர் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
இதேநேரம், இந்தச் சம்பவம் குறித்து அனைத்து ஊடக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த அரசும் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.