* அரசின் யோசனைக்கு 3 கட்சிகள் கடும் எதிர்ப்பு
மனித உரிமை மீறல் குறித்து சர்வசே சமூகத்தினால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் நோக்குடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து அதன் மூலம் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அரசின் இத்தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன கடுமையாக சாடியுள்ளதுடன், இத்தீர்மானமானது ஒரு ஏமாற்று வித்தையெனவும் குற்றம் சாட்டியுள்ளன.
உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது குறித்து அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறுகையில்;
"மனித உரிமை மீறல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அவசியத்தை வலியுறுத்தி ஆளும் கட்சி பிரதம கொரடாவிற்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளேன். சகல கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தெரிவுக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளோம்.
சர்வதேச பாராளுமன்ற ஒன்றியுமும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அவசியம் குறித்து எமக்கு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது" என்றார்.
எனினும், இதற்கு முற்றிலும் எதிர் மறையான கருத்துகளையே ஏனைய கட்சிகள் வெளியிட்டன.
மனோ கணேசன் எம்.பி.
தலைவர்- மேலக மக்கள் முன்னணி
"மனித உரிமை மீறல் குறித்து ஆராயும் பல கமிட்டிகளை நாங்கள் இதுவரை கண்டுள்ளோம். மகாநாம திலகரட்ன, பசுபதி என பலரையும் நாம் கண்டுள்ளோம். பகவதிகுழு வெளியேறக் காரணமாக இருந்த அரசாங்கம் இப்போது சார்க் நாடுகளை உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமிக்கப் போவதாக கூறுகிறது.
சர்வதேச சமூகம் ஐ.நா. கண்காணிப்பகம் இலங்கையில் அவசியமென வலியுறுத்தும் நிலையில் அண்மையில் ஜெனீவாவில் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தலை நிராகரித்தது. எனினும், பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது ஒரு ஏமாற்று நடவடிக்கை, ஒரு பூசிமெழுகும் செயலாகவே இதனை நோக்குகிறோம். பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்தும் விரைவில் முடிவெடுப்போம்" என்றார்.
என். ஷ்ரீகாந்தா எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
"இலங்கையில் மனித உரிமைகள் விவகாரத்தை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நிறுவப்பட வேண்டுமென்ற பிரேரணை சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கம் அதற்குத் தயாரில்லை. இதனால், ஒரு மாற்று ஏற்பாடாக பாராளுமன்ற தெரிவுக் குழுவை நிறுவி சர்வதேச சமூகத்தின் பிரேரணையை மழுங்கடிக்கவும் முறியடிக்கவும் அரசாங்கம் முயல்கிறது.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களை மூடிமறைக்க எடுக்கப்படும் ஒரு தந்திரோபாயமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைக் கருதுகிறது" என்றார்.
திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி.
செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சி
" பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றிய பூரண விபரங்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. இக்குழு அரசாங்கத்தை காப்பாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கையில் ஈடுபடுவதை நாம் அனுமதியோம். இது பற்றி அதிகூடிய கவனத்தை செலுத்தவும் ஐ.தே.க. தயாராகவுள்ளது" என்றார்.