இந்திய அணிக் கப்டன் தோனிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆடு பலி கொடுத்தது தொடர்பாக இவரை அணியிலிருந்து நீக்க வேண்டுமென மிருக வதை எதிர்ப்பு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய அணியின் ஒரு நாள் போட்டிக்கான கப்டனாக அசத்தி வருகிறார் தோனி. `ருவென்ரி - 20' உலக கிண்ணத்தை வென்று காட்டிய இவர், அவுஸ்திரேலிய மண்ணிலும் கலக்கினார். முக்கோணத் தொடர் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இதற்குப் பின் சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பிய தோனி, அவுஸ்திரேலிய மண்ணில் கிடைத்த வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொன்னார். நேர்த்திக் கடன்களையும் முறைப்படி செலுத்தினார்.
முர்ரியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்ற இவர், கையில் புனித நீருடன் அரை கிலோ மீற்றர் தூரம் நடந்து போய் வழிபட்டார். இங்குள்ள ராமர், சீதா, அனுமார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் துர்க்கை அம்மன், மாதா தியோரி கோயிலுக்கு சென்று தனது ஆன்மீகக் கடமையை நிறைவேற்றினார்.
இப்படி பல்வேறு கோயில்களுக்கு சென்ற தோனி, ஆடு ஒன்றை பலி கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர் பிறந்த ஜார்க்கண்ட மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் அதிகம். இவர்கள் வெற்றியை வேண்டி ஆடு, கோழிகளை பலி கொடுப்பது சகஜம். முக்கோணத் தொடரின் இறுதியாட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்பதற்காக சில ஆதிவாசிகள் கோழியை பலி கொடுத்தனர்.
இதே போலத்தான் தோனியும் தற்போது ஆடு பலி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அகில பாரதிய ஜீவ ரக்ஷா பிஷ்னோய் சபா (ஏ.பி.ஜே.ஆர்.பி.எஸ்) என்ற மிருக வதை எதிர்ப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அநியாயமாக ஒரு மிருகத்தை கொன்றதற்காக இந்திய அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டுமென பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவாரை கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக பிஷ்னோய் சபாவை சேர்ந்த ராஜ்குமார் பெனிவல் கூறியது:
கடவுளுக்கு நேர்த்திக் கடன் என்ற பெயரில், ஆடு ஒன்றை பலி கொடுத்து பாவம் செய்துள்ளார் தோனி. இவரை உடனடியாக இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும். தவறினால் வழக்கு தொடுக்கப்படும். நாட்டில் உள்ள மரங்கள், விலங்குகளை காப்பதற்காக பிஷ்னோய் அமைப்பு பாடுபட்டு வருகிறது. எங்களது அமைப்பினர் எழுப்பிய புகாரின் அடிப்படையில் தான், அன்று மான் வேட்டையாடிய வழக்கில் பொலிவுட் நடிகர் சல்மான் கான் சிறை செல்ல நேர்ந்ததாகவும் தெரிவித்தார்.