சர்வதேச போட்டிகளில் தான் சதம் அடித்தபோது பயன்படுத்திய அனைத்து துடுப்பு மட்டைகளையும் (81) பத்திரமாகப் பாதுகாத்து வருவதாக சச்சின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த முக்கோணத் தொடரில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி முதன் முறையாக அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை வென்றது. முதல் இறுதியாட்டத்தில் அபாரமாக விளையாடிய சச்சின் சதம் அடித்து சர்ச்சைகளுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
இவர் இதுவரை டெஸ்டில் 39, ஒருநாள் போட்டியில் 42 என மொத்தம் 81 சதங்கள் அடித்துள்ளார். இவர் தான் சதம் அடிக்கப் பயன்படுத்திய அனைத்துத் துடுப்பு மட்டைகளையும் பத்திரமாகச் சேகரித்து வைத்துள்ளார்.
இது குறித்து சச்சின் அளித்த பேட்டியில்;
என்னிடம் எத்தனை துடுப்புகள் இருக்கின்றதெனத் தெரியாது . ஆனால், சதம் அடித்த அனைத்துத் துடுப்பு மட்டைகளையும் பத்திரமாகச் சேகரித்து வைத்துள்ளேன். சிட்னியில் நடந்த முக்கோணத் தொடரின் முதல் இறுதியாட்டத்தில் ஜோன்சன் பந்தில் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலாக பவுண்டரிகள் விளாசியதை மறக்க முடியாது. பெர்த் டெஸ்டில் பிரட்லீ பந்தில் `ஸ்ரைட் டிரைவ்' செய்தது எனக்கு மிகவும் பிடித்தமான ஷொட்.
கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க கிரிக்கெட் மீதான காதல் அதிகரித்துள்ளது. சிட்னி டெஸ்டில் டிராவிட்டுடன் ஜோடி சேர்ந்தது அடுத்து வரும் போட்டிகளுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதற்குப் பின்னர் நடந்த பெர்த் டெஸ்ட் மற்றும் முக்கோணத் தொடர் என அனைத்திலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்த முடிந்ததென்றும் சச்சின் தெரிவித்தார்.