* தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சகீர்கான் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. கணுக்கால் காயத்தால் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய சகீர்கான் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், முழுமையாக குணமடையவில்லை. `சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் இன்னும் தயாராகவில்லை' என்று சகீர்கான் கூறியிருக்கிறார்.
* பாதுகாப்பு காரணமாக இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை அவுஸ்திரேலியா தள்ளி வைத்துவிட்டது. இந்தத் தொடர் நடந்திருந்தால் அவுஸ்திரேலிய வீரர்கள் ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கும் இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் போயிருக்கும். ஆனால், தற்போது பாகிஸ்தானுடன் போட்டியில்லை என்பதால் அவுஸ்திரேலிய வீரர்கள் 2 வார காலம் ஐ.பி.எல்.போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மே 2 ஆவது வாரம் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்தியா புறப்படுகிறது. அதற்கு முன்பாக நடக்கும் பயிற்சி முகாமுக்கு அவுஸ்திரேலிய வீரர்கள் திரும்பி விட வேண்டும்.
* மார்ச், ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் பயணத்தை அவுஸ்திரேலியா ஒத்திவைத்து விட்டதால், மறு அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தப் போட்டித் தொடரை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. அவுஸ்திரேலிய சபை நிர்வாகிகள் சந்திப்பின் போது இதனை பரிந்துரை செய்யவுள்ளது.
* பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிவிட்ட தென்ஆபிரிக்க அணி நேற்று வெள்ளிக் கிழமை 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆடியது. இதில் வெற்றி பெற்று, சீசனில் உலகில் சிறந்த ஒரு நாள் போட்டி அணி என்று முடிக்க வேண்டுமென்ற நம்பிக்கையுடனிருப்பதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபைத் தலைமை நிர்வாக அலுவலர் ஜெரால்ட் மஜோலா போட்டிக்கு முன் தெரிவித்தார். கடைசி ஆட்டத்திலும் தென்ஆபிரிக்கா வெற்றி பெற்றதால், தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.