அஜாதசத்ரு
தமிழ் ஊடகவியலாளர்களை மாத்திரம் ஆரம்ப காலத்தில் இலக்குவைத்த அரச பயங்கரவாதம் தற்போது உண்மை நிலைவரங்களை வெளிக்கொண்டுவரும் அனைத்து ஊடகவியலாளர்களையும் நசுக்கும் நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வருவதையே அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.
கடந்த ஒரு வார காலப் பகுதிக்குள் ஐந்து ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஊடகவியலாளர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலுமொரு ஊடகவியலாளரின் வீட்டுக்குள் நுழைந்த காடையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுவரையில் தமிழ் ஊடகவியலாளர்களையும் அதற்கு பின்னர் ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களின் ஊழல் மோசடிகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் வெளிக்கொண்டு வந்தமைக்காக பெரும்பான்மையான ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலைமைகளுக்கு அப்பால் தற்போது அதிகார துஷ்பிரயோகங்களை தட்டிக்கேட்டமைக்காக அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும் கொடூரமான நிலைமை உச்சத்தை எட்டியுள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு உதவி இயக்குநரும் தொழிற்சங்கவாதியுமான அநுரசிறி ஹெட்டிகே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை வெல்லம்பிட்டி கொட்டிகாவத்தை பகுதியில் வைத்து இனந்தெரியாத காடையர் கோஷ்டியொன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமைக்கு செல்வதற்காக கொட்டிகாவத்தை பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையிலேயே மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு காடையர்களினால் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
அநுரசிறி ஹெட்டிகே தாக்கப்பட்ட சம்பவத்துடன் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த பிரதியமைச்சர் மேர்வின் சில்வா செய்திப் பணிப்பாளர் ரி.எம்.சந்திரசேகரவை அவரது அறைக்குள் பூட்டிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தையறிந்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் விடயத்தை அறிந்து அங்கு சென்ற நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா வெளியே வரமுடியாதவாறு சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற ஊடகத்துறை அமைச்சர் மற்றும் படை உயரதிகாரிகள் ஆகியோர் சுற்றிவளைத்து நின்றவர்களுடன் சமரசம் பேசி மேர்வின் சில்வாவை பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்துவந்தனர்.
எனினும், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து செய்திப்பணிப்பாளரை தாக்கிய பிரதியமைச்சர் மேர்வின் சில்வா நடந்த சம்பவத்திற்காக அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே அவரை வெளியே செல்ல அனுமதிக்க முடியும் என்று அங்கு சூழ்ந்துநின்ற ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மீது ஆத்திரமடைந்த சிலர் தாக்குதல் நடத்தியதுடன் அவரது வாகனத்தையும் சேதப்படுத்திய நிலையில் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகத்துறை அமைச்சர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் தமது கண்டனத்தை வெளியிட்டதுடன் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்று அரசாங்கமும் அறிவித்திருந்தது.
ஆனால், அரச கட்டுப்பாட்டு நிறுவனமொன்றுக்குள் அநாகரிகமாக நடந்துகொண்ட பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, செய்திப் பணிப்பாளர் ரி.எம்.சந்திரசேகர வேறு பகுதிக்கு உள்ளக இடமாற்றத்துக்குள்ளானார்.
அத்துடன், டிசம்பர் 27 இல் குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பெயர் விபரங்கள் குற்றப்புலனாய்வுப் பணியக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பழிவாங்கும் படலங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊழியரான லால்ஹேமா மாவலகே ஜனவரி 25 இல் குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜனவரி 29 இல் துலிப் துஷந்தவின் வீட்டுக்கு சென்ற ஆயுதபாணிகள் அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தாயாரை மிரட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பெப்ரவரி 4 ஆம் திகதி ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சிரேஷ்ட படப்பிடிப்பாளரான பியல் ரஞ்சித்தின் வீட்டுக்கு சென்ற குண்டர்கள் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
மார்ச் 5 ஆம் திகதி கடமை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த திருமதி ரஞ்சனி விஜயரத்னவின் முதுகுப்புறத்தை கூரிய ஆயுதத்தால் கிழித்துவிட்டு குண்டர் கும்பலொன்று தப்பிச்சென்றது.
இறுதியாக மார்ச் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அநுரசிறிஹெட்டிகே தாக்கப்பட்டுள்ளார்.
பழிவாங்கும் நோக்குடன் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இச்சம்பவங்களுக்கு பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவே காரணமென்று குற்றஞ்சாட்டியுள்ள ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறுமேயானால் பாரியளவிலான தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் எச்சரித்துள்ளனர்.
ஜே.வி.பி. உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ், சிங்கள ஊடக அமைப்புகளும் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளதுடன் இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கையென்றும் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதேவேளை, மார்ச் 6 ஆம் திகதி ஐந்து ஊடகவியலாளர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுட்ரிச் என்ற இணையத்தளத்தை நடத்தும் கே.எஸ்.திசநாயகம், வி.ஜசிகரன், அவரது மனைவி வளர்மதி மற்றும் செய்தியாளர் கித்சிறி விஜயசிங்க, புகைப்படப்பிடிப்பாளர் கயன் வசந்த ரங்கா, வீடியோ இயக்குநரான உதயனன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களில் அவுட்ரிச் இணையத்தளத்தின் ஆசிரியர் கே.எஸ்.திசநாயகம், ஊடகவியலாளரும் அச்சக உரிமையாளருமான வி.ஜசிகரன், அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், அவுட்ரிச் இணையத்தளத்தின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து மார்ச் 8 ஆம் திகதி சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளரும் சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியருமான எஸ்.சிவகுமார் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு பல மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவுட்ரிச் இணையத்தளத்தின் ஆசிரியர் மற்றும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை எல்லைகடந்த பத்திரிகையாளர் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் இது தொடர்பாக இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
அவுட்ரிச் இணையத்தளத்திற்கு எவ்.எல்.ஐ.சி.ரி. என்ற ஜேர்மன் மன்றமே நிதி உதவி வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு வேறு எந்தவொரு நபர்களுடனும் தொடர்பில்லையென்றும் எல்லை கடந்த பத்திரிகையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சுதந்திர ஊடகவியலாளரான முனுசாமி பரமேஸ்வரியின் வீட்டுக்குள் நுழைந்த கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பரமேஸ்வரியின் தந்தை, சகோதரன், சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த முன்வராவிட்டால் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான முதலாவது நாடாக இலங்கை விரைவில் மாறிவிடும்.