2002 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி ஒரு முக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது. கொழும்பை அண்மித்திருக்கும் அதுருகிரிய என்ற இடத்தில் மிகசக்தி வாய்ந்த ஆபத்தான ஆயுதங்கள் இராணுவ உளவுப் புரிதிறன் பணிப்பகத்தினால் (Directorate of Militarylntel ligence) வைத்து நடத்தப்பட்ட ஒரு தனி வீடொன்றில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டன. ஒரு இராணுவ அலுவலரும் மற்றும் ஐந்துபேரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் வடகிழக்கில் தமிழர் வாழ் இடங்களுக்குள் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்தவர்கள். விடுதலைப் புலிகளின் தலைமைத்துவங்களைத் தேடி அழிக்கும் பொறுப்பு இவர்களுடையது. இவர்களின் அணியே வானூர்த்திப் பொறியி யலாளராகிய சங்கரைக் கொன்றது. இந்தக் கைதின் பின்னரே இராணுவம் நடாத்தும் இரகசிய கொலைகள் பற்றிய செய்திகள் அம்பலத்துக்கு வந்தன .
சந்திரிக்கா போலல்லாது ரணில் நேரடியாக சமாதான நடவடிக்கைகளில் இறங்கினார்.
தமிழரைப் பற்றியதான சிங்களத் தலைமைத்துவங்களின் அடிப்படை அபிலாஷைகள் ஒன்றேயெனினும் நடைமுறைகள் வித்தியாசப்பட்டன. நரிக்குணம் சிலருக்கு,எருமை மாட்டுக்குணம் சிலருக்கு. நரிக்குணம் உடையவர்கள் நயவஞ்சகமாகப் பேசி,நடந்து காரியத்தைச் சாதிக்கப் பார்ப்பார்கள்.எருமை மாட்டுக் குணம் உடையவர்கள் தாங்கள் சிங்களச் சிங்கங்கள் என்று எண்ணிக்கொண்டு கர்ச்சிக்கப் பார்ப்பார்கள். தமது தலைகளை எதனுடனாவது மோத ஆயத்தமாய் இருப்பார்கள். எனினும் இருவரதும் அடிப்படைச் சிந்தனை பின்வருமாறு இருக்கும்-தமிழர்கள் அதிகம் கேட்கின்றார்கள். அதை நிறுத்த வேண்டும்.
வட கிழக்குத் தமிழர்களின் பலம் பாராளுமன்றப் பலம் அல்ல. அவர்கள் மலைநாட்டுத் தமிழர்கள் போல் அல்லது முஸ்லிம் கட்சிகள் போல் எமக்கு அரசமைக்கப் பாராளுமன்றத்தில் போதிய பலம் இல்லாவிடில் எம் கழுத்தை நெரித்து உதவி எடுத்துத் தமது காரியங்களைச் சாதிப்பவர்கள் அல்லர். ஒரு சில சுய நலமிகளைத் தவிர அவர்களைப் பணத்தாலும்,பதவியாலும் விலைக்கு வாங்க முடியாதுள்ளது. அவர்களின் பலம் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களே. அவர்களின் ஆதரவால்த்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தினூடு அவர்கள் போராடுகிறார்கள். விடுதலைப் புலிகளும் எங்கள் இராணுவத்தினர் போல் மிகக் கொடூரமான உயிர்க்கொலைகளில் ஈடுபட்டாலும் எமக்குள் வேற்றுமை இருப்பதாகக் காட்டி அவர்களை பயங்கரவாதிகள் என்று உலக அரங்கில் ஓரங்கட்ட வேண்டும். வெளிநாட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து அவர்களுகுக்கு கிடைக்கும் உதவிகளை இடை நிறுத்த வேண்டும். தமிர்களை இலங்கையில் தலை தூக்க விட்டால் அவர்கள் எங்களை இல்லாமல் பண்ணிவிடுவார்கள். இந்த அடிப்படையில்த்தான் இவர்கள் இருவருமே சிந்திக்கின்றார்கள்.
ஒரு சிலர் வெளிநாட்டில் தமிழர்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை எடுத்து உள்நாட்டில் மனித உரிமைப்பாதுகாவலர் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கின்றார்கள். மறுசாரர் உள்நாட்டிலேயே காரியத்தைச் சாதிக்கலாம் என்று காட்டெருமை போல் நடந்து கொள்கின்றார்கள். ஆனால் அடிப்படையில் வட கிழக்குத் தமிழர்களைத் தலையெடுக்கவிடாது தமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதே அவர்கள் அவா. வடக்கு கிழக்கில் 1959 இல் தமிழ் ஆட்சி மொழியாக வருதை ஏற்றுக் கொள்வதில் சிங்கள மக்களுக்கு என்ன பிரச்சனை இருந்தது? அவர்கள் மொழி அவர்களுடன் எங்கள்மொழி எங்களுடன்: இருவரும் சேர்ந்து கைகோர்த்துச் செல்வோம் என்று சொல்லிச் செல்லவேண்டியவர்கள் இலங்கையின் தமிழர்களை அணைக்காது ஆட்சி நடத்தி வருவது இந்த அடிப்படைத் துவேஷ மனோ நிலையையே வெளிப்படுத்துகின்றது.
ஆனால் அவர்கள் இலங்கைத் தமிழர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனது கருத்து. இலங்கைத் தமிழ் மக்கள் வெவ்வேறு கால கட்டங்களில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால் இலங்கைத் தமிழர்களின் பூர்வீகம் இந்த நாட்டில் சிங்கள இனம், சிங்கள மொழி ஆகியன பிறக்க முன்னரே இருந்து வந்துள்ளது. உண்மையில் ஒரே திராவிட ஆதி மூலத்தில் இருந்து தான் சிங்கள இனமும் மொழியும் கூட உற்பத்தியாகியுள்ளன. ஆகவே இலங்கைத் தமிழர்கள் தமது மூல அடிப்படையை வைத்து இந் நாட்டின் ஆதிக்குடிகள் நாமே, எமக்கிருக்கும் உரித்து மற்றவர்களால் எமக்குத் தரப்படக்கூடிய தொன்றல்ல, எமக்கே அடிப்படையில் சொந்தமான உரித்து அது என்று கூறுவதில், கொள்வதில் பிழையேதுமில்லை. வெளிநாட்டான் நிர்வாகச் சீர்திருத்தத்துக்காகத் தனித்திருந்த மக்கட் கூட்டத்தினரை ஒரு குடைக் கீழ் கொண்டுவந்தான். குடையை எடுத்து கொண்டு போகும் போது சிறுபான்மையினருக்கான நிழலும் போய்விட்டது. பெரும்பான்மை இனத்தவர் பாராளுமன்றத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இப்பொழுது இவ்வளவு தருவோம், இதைத் தர மாட்டோம், அதை வேண்டுமானால் இருவரும் பங்கு போடுவோம் என்று பேரம் பேசுகிறார்கள்.
இந்தப் பேரம் பேசுவதற்கு அவர்களுக்கு கிடைத்துள்ள ஆயுதம் பாராளுமன்ற ஜனநாயகம் (Parliamentary Democracy) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டால் சிறுபான்மையினருக்குத் தாம் விதிப்பது தான் சட்டம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் தமிழர்களுக்கிருந்த சம அந்தஸ்தை பாராளுமன்ற பெரும்பான்மைப் பலத்தால் அவர்கள் இன்று தம் வசம் எடுத்துக் கொண்டுள்ளதால் அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே இந்த நரி-எருமை இரு தரப்புத் தலைமைத்துவங்களினதும் அடிப்படை அவா, அபிலாஷை, ஆதங்கம், அச்சம் என்பன. ஆகவே சிங்களத் தலைமைத்துவங்களின் நோக்கு ஒன்று; நடைமுறை வேறு. இதை இலங்கைத் தமிழ் மக்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
ரணில் வடக்குக் கிழக்குக்கு அனுப்பப்பட்ட பாவனைப் பொருட்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார்.அ 9 வீதி திறக்கப்பட்டது. யுத்த நிறுத்தம் இரு தரப்பாராலும் கடைப்பிடிக்கப்பட்டது. சுமூக நிலை ஓரளவுக்குக் கொண்டுவரப்பட்டது.
நோர்வேயின் அனுசரணையுடன் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பிரதமர் ரணிலுக்கும் விடுலைப் புலிகள் இயக்கத் தலைவருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. வெளிநாட்டு அரசாங்கங்கள் அதனை வரவேற்றன. 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்த அடிப்படையில் இன நெருக்கடிக்குத் தீர்வுகாணவேண்டும் என்ற இன்றைய அரசாங்க யோசனையை வெகுவாக வரவேற்று "தீர்வுக்கு முதல்படியது" என்று இன்று கூறும் அதே இந்தியா தான் 2002 இல் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் வரவேற்றது. அதாவது இந்தியா வழங்கிய 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் இனநெருக்கடிக்குத் தீர்வாக அமையாது என்ற அடிப்படையில் தான் 1987 - 1988 இல் இருந்து போர் நடந்து கொண்டிருக்கின்றது. அப்போரை நிறுத்தி 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு அப்பால் ஒரு தீர்வைக் காணவேண்டும் என்றே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அப்பொழுதே 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று இந்தியா கோரியிருக்கலாம். தமிழர்களின் கோரிக்கை அத்திருத்தத்திற்கு அப்பாலுஞ் சென்றதால்த்தான் உருப்படியான ஒரு தீர்வு தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை உணர்ந்தே இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்றது எனலாம். ஆனால் இப்பொழுது 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் ஏதோ ஒரு தீர்வின் அடிப்படை என்ற விதத்தில் இந்தியா அதனை வரவேற்றிருப்பது வேறு அடிப்படைக் காரணங்களுக்காகவோ என்று எண்ண வேண்டியுள்ளது.
அடுத்த வாரஞ் சந்திப்போம்.