வடக்கில் மோதல்கள் உக்கிரமாக இடம்பெற்று வரும் அதேசமயம், மனிதஉரிமை மீறல்களும் அதிஉச்சக் கட்டத்திற்கு சென்றுவிட்டதை வெளிப்படுத்துவதாக சர்வதேசத்தின் கடுமையான விமர்சனங்கள் அமைந்துள்ளன.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படும் மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் மனித உரிமை விவகாரங்களுக்கு கொழும்பு மதிப்பளிப்பது மோசமாகக் குறைவடைந்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்ட கடுமையான கண்டனம் அரசாங்கத்தை பெரிதும் விசனமடைய வைத்திருக்கின்றதை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.
2007 காலப்பகுதியிலான உண்மையான நிலைவரத்திற்கு மாறாக திரிபுபடுத்தப்பட்ட அறிக்கையையே இலங்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில், ஆதாரமற்றவையும் நிந்தனை செய்யும் விதத்தில் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானதென தெரிவித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, யாரோ கூறியதை அடிப்படையாகக் கொண்ட அந்த அறிக்கையானது யுத்தத்திலும் சர்வதேச ரீதியிலும் தனது இருப்பைப் பேணுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளுக்கு உயிரோட்டம் அளிப்பதாகவே அமையுமென தனது ஆட்சேபனையை தெரிவித்திருக்கிறது.
ஆனால், அமெரிக்க அரசாங்கம் தனது அறிக்கைக்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதுடன், 196 நாடுகளின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைக்கு காங்கிரஸ் (பாராளுமன்றம்) ஆணை வழங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கை நீதியான நோக்கத்தைக் கொண்டதெனவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தவறானவையெனக் கருதப்பட்டவற்றை சீர்செய்யுமாறு அரசாங்கமும் மற்றும் ஏனைய தரப்பினரும் தெரிவித்திருக்கும் தகவலை வரவேற்கும் அதேசமயம், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கத்துடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கத் தூதரகம் நாசூக்கான மொழிநடையில் அழுத்தி உரைத்திருக்கின்றமையும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.
2005 டிசம்பரின் பின்னர் அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், மனிதாபிமானப் பிரச்சினைகளில் அரசாங்கம் அதிகளவு கரிசனை காட்டவில்லையென்பது குறித்தும் சர்வதேசத்தின் கவலையும் அக்கறையும் விசாலமடைந்துவருகின்றது.
யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகிக்கொண்டதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே, அமெரிக்கா ஆகிய டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டு இணைத்தலைமைகளும் மற்றும் இந்தியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன.
அரசாங்கம் யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் ஒருதலைப்பட்சமாக விலகியதற்கு வருத்தம் தெரிவித்துவரும் இந்த நாடுகள், இராணுவ ரீதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதெனவும் நம்பகரமான அரசியல் தீர்வுப் பொதியை முன்வைக்குமாறும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், சமாதான நடவடிக்கைகள் முழுமையாக மறைந்துவிட்ட நிலமையில், இந்த நாடுகளின் அதாவது சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு சாதகமான அனுகூலங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அறவேயில்லையென்றே கூறமுடியும். அத்துடன், மிதவாத சிந்தனைகளை கட்டியெழுப்பவும் சமாதான நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மிகவும் கடுமையான பிரயத்தனத்துடன் சர்வதேச சமூகத்தால் கட்டியெழுப்பப்பட்ட உள்சார் கட்டமைப்புகள் யாவும் சமாதான நடவடிக்கைகளின் அஸ்தமனத்துடன் மறைந்துவிட்டன.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை தற்போது முன்னிலைப்படுத்தி வருகின்றபோதும், அண்டை நாடான இந்தியாவும் இலங்கைக்கு அதிகளவு உதவி வழங்கும் நாடான ஜப்பானும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாக தமது கருத்துக்களை சுதந்திரமான முறையில் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச ரீதியாக ஒன்றுபட்டு நடவடிக்கை எடுப்பதற்கு இந்த இரு நாடுகளும் ஒத்துழைத்து செயற்படுவதற்கான சாத்தியம் இல்லையென்றே தென்படுகின்றது.
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை மதிப்பளிக்கவில்லையென்று அமெரிக்கா சாடினாலும், அதன் ஏனைய நடவடிக்கைகள் நிலமையை சமாளித்துவிடுவதாகவே காணப்படுகின்றது. கொழும்பானது மேலும் தாமதம் காட்டாமல் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றதுடன், மனித உரிமை விகாரங்களில் சிறப்பான முறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக எதிர்கால உதவிகள், இராணுவ உதவிகள் தொடர்பாக சில கட்டுப்பாடுகளுக்கான அறிவிப்புக்களையும் விடுத்திருந்தது. ஆனால், அல்-ஹைடா போன்று விடுதலைப்புலிகளும் உலகின் மோசமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றென அமெரிக்க சமஷ்டி விசாரணைப்பிரிவு அறிக்கை விடுத்திருந்த அதேசமயம், யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் இலங்கை அரசாங்கம் விலகியது தொடர்பாக விமர்சித்துக் கடுமையான அறிக்கையை அமெரிக்கா விடுத்திருந்தது. வாஷிங்டனால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கைகளும் அறிக்கைகளும் தாக்கத்தை மென்மைப்படுத்துபவையாகவே காணப்படுவதுடன், இலங்கை தொடர்பாக தனக்கு அவ்வப்போது பொருத்தமானதெனக் கருதும் அணுகுமுறையையே அமெரிக்கா தொடர்ந்தும் கைக்கொள்ளும் என்பது தெளிவானதாக உள்ளது.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களின் பதிவுகள் எவ்வளவு மோசமானவையாகக் காணப்பட்டாலோ இனநெருக்கடி மேலும் அவலமான நிலைமைக்குத் தள்ளப்பட்டாலோ அல்லது கொழும்பு போரை மேலும் உக்கிரப்படுத்தினாலோ சர்வதேச சமூகத்தின் எதிர்கால செயற்பாடுகள் தத்தமது தேசிய நலன்களை சார்ந்ததாக இருக்கும் என்பது மட்டுமே நிச்சயமா னதாகக் காணப்படுகின்றது.
மனித உரிமைகள் மேம்பட்டு இனநெருக்கடிக்கு சுமுகமான தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே தமிழ் மக்கள் தற்போது உள்ளனர்.
அவலமும் துன்பமும் மேலும் தொடர்வதற்கான களநிலைவரமே காணப்படுகின்றது. சிறப்பான எதிர்காலத்திற்கான ஒளிக்கீற்று மிகச்சிறிய அளவிலும் தென்படவில்லை.