வட, கிழக்கை பாரம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற அபிப்பிராயம் வலுவடைந்துவரும் நிலையில் இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் தமது கட்சி தீர்மானம் எடுக்கும் என்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவருடனும் கூட்டுச் சேர்வதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கவில்லை.
இது குறித்து பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிராந்திய மட்டத்திலும் கட்சி மட்டத்திலும் இது குறித்து ஆராய்ந்து வருகிறோம். உபாயங்கள், வியூகங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது.
எனினும், விரைவில் இது குறித்த தீர்மானத்தை கட்சி மேற்கொள்ளும். அதுவரை தனியாகவா அல்லது கூட்டாகவா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் கூறமுடியாது.
கூட்டுக்கு முன்னர் இனப் பிரச்சினை விவகாரம் மற்றும் முற்றுப்பெறாத ஏனைய விடயங்கள் குறித்தும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது என்று ஹக்கீம் கூறினார்.