ஐரோப்பிய ஒன்றிய முக்கியப் பிரதிநிதிகள் குழுவொன்று மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே குழுவொன்றை கடந்தவாரம் அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் வருகையானது இலங்கை அரசியல் வட்டாரங்களிடையே எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் சர்வதேசத்தில் முன்வைக்கப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனப் பிரேரணையை நிறைவேற்றத் தயாராகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் வெளியிடும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கைக்கான எதிர்கால உதவிகள் தங்கியுள்ளன.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையம் சந்தித்து கலந்துரையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.