தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமான கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்த எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டுமென்ற வேண்டுகோள்களும் வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளன.
தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் பொது அமைப்புகளின் பிரதி நிதிகள், புத்தி ஜீவிகள், மத அமைப்புகள் இதற்கான வேண்டுகோள்களை விடுத்திருப்பதுடன், முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாக பெரும்பான்மையினத்தவரை குடியேற்றும் நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புனிதப் பிரதேசம், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பல ஹெக்ரெயர் விவசாய நில மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக தமிழ்,முஸ்லிம் எம்.பி.க்கள் உட்பட அப்பகுதிமக்களிடமிருந்தும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
உயர் பாதுகாப்பு வலயம்,புனிதப் பிரதேசங்கள் என்ற போர்வையில் அபிரிக்கப்படும் பிரதேசங்களில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்பட்டு,அங்கு சிங்கள குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அரசாங்க உயர் மட்டத்தினரின் ஆசிர்வாதத்துடன் அமைச்சர் சம்பிக்க ரணவக்க,வட - கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம ஆகிய இருவரும் நில ஆக்கிரமிப்பில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழர் மகாசபை போன்றவை குற்றஞ்சாட்டிவருகின்றன.
இந்நிலையில் நில ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்தி, பேரினவாதச் சக்திகளை தோற்கடிப்பதற்கு தமிழ்,முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை அவசியமெனவும்,தமது பிரதிநிதித்துவங்களை காப்பாற்ற இரு தரப்பும் ஒன்றபடுவதுடன்,தேர்தலில் ஒன்றாக களமிறங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு அடுத்துவரும் தினங்களில் கொழும்பில் தமிழ்,முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அறியவருகிறது.
கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் மக்களும் இது குறித்து ஆர்வமுடனிருப்பதாகவும், அவர்களே இருதரப்பும் ஒன்றுபட்டுபொதுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பொது அமைப்புகளிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
கிழக்கு மாகணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் கணிசமான ஆதரவிருக்கும் நிலையில் இருகட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதன் மூலம் தாயகப் பிரதேசங்களை பேரினவாதப் பிடியிலிருந்து ஓரளவாவது பாதுகாக்க முடியுமெனவும், ஒன்றுபட தவறும் பட்சத்தில் வாக்குகள் சிதறுண்டு பிரதிநிதித்துவம் குறைவடைந்து அது நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுமெனவும் பொது அமைப்புகள் தமிழ்,முஸ்லிம் அரசியல் சக்திகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.