* " பொய் நிலைக்காது சத்தியம் அழியாது"
தமிழகப் பேராசிரியை இரா. ருக்மணி திருமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நிகழ்த்தும் கம்பராமாயணம் சொற்பொழிவின் முதலாம் நாள் உரையின் சுருக்கம். ஆன்மீகத்தினால் உண்டாக்க முடியும். விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கவே முடியும் என்று தமிழகப் பேராசிரியை `தமிழ்க் கடல்' செல்வி. இரா.ருக்மணி, திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ காலத்தில் கம்பராமாயணம் சொற்பொழிவுத் தொடரின் முதல் நாள் நிகழ்வில் பேசும் போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் சொன்னதாவது;
"இராமாயணம், பாரதம் இரு பெரும் இதிகாசங்களாகும். இந்து மதத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. புராணத்துக்கும் இதிகாசத்துக்கும் என்ன வேறுபாடு என்றால் குழம்புக்கும் அவியலுக்கும் உள்ள வேறுபாடு தான். ஒரு காயைப் போட்டு செய்கிறது குழம்பு. பல காய்களைப் போட்டு ஆக்குவது அவியல். ஏதாவது ஒரு தர்மத்தைப் பற்றிச் சொல்வது புராணம். எல்லாத் தர்மங்களையும் சொல்வது இதிகாசம். பொய் சொல்லக் கூடாது என்ற ஒரு தர்மத்தைச் சொல்வது தான் அரிச்சந்திர புராணம். மற்றப் புராணங்களும் தொண்டின் மேன்மையை மரணத்திற்கு பின் எப்படி நடக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு புராணமும் கூறுகின்றது. ஆனால், இராமாயணம், பாரதம் ஆகியவற்றில் நாம் வாழ வேண்டியதற்குத் தேவையான நூற்றுக்கு மேற்பட்ட தர்மங்களை அவதார நாயகனாக இறைவனே வாழ்ந்து காட்டியிருக்கின்றான். இதெல்லாம், நடந்ததா, உண்மையா, கட்டுக்கதையா என்று இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. ஒற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொய் என்பது ரொம்ப நாளைக்கு நிலைக்காது. கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள் தான். சத்தியம் என்றைக்கும் அழியாது. பொய் சொல்பவனுக்குத் தான் சொன்ன பொய் அவனுக்கே மறந்து போய்விடும். ரி.வி.இல்லாமல், வானொலி இல்லாமல், பத்திரிகை இல்லாமல், போக்குவரத்துச் சாதனம் இல்லாமல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இமயம் தொட்டு குமரி மட்டும் பாரத கண்டத்திலே மட்டுமல்லாமல் இலங்கையிலே, தாய்லாந்திலே ஜாவாவில், சீனாவில் இப்படி வேற்று நாடுகளில் கூட இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் காவியம் இராமாயணம். 18 இராமாயணம் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. அதனால், இராமாயணம் சிரஞ்சீவியாக இருக்கின்ற காரணத்தினால் இது நடந்த கதை. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இராமனை தெய்வமாக நினைத்தாலும் சரி அல்லது ஒரு மாமனிதனாக நினைத்தாலும் சரி அவன் வாழ்ந்து காட்டியது நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டுதல். இதிலே வால்மீகி எழுதிய இராம காதை, இராமர் காலத்திலேயே எழுதியது. அதற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் கம்பர் 10,000 பாடல்களைக் கொண்ட கம்பராமாயாணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தில் சில இடங்களில் தடுமாற்றம் வரும். ஆனால், கம்பராமாயாணத்தில் எந்த ஒரு இடத்திலும் சந்தேகமோ கலக்கமோ வராது. எப்படிப்பட்ட வக்கிரமான கேள்விகளைக் கேட்டாலும் கூட அதற்குச் சரியான பதிலை கம்பரே எழுதி வைத்து விட்டுப் போயிருக்கின்றார். எல்லாருக்கும் முடிவு ஒருமாதிரி வருவதில்லை. பிறந்த இடம் வேறு, வகுப்பு வேறு, பேசுகின்ற மொழி வேறு, ஆனால், பிறக்கும் இடம் ஒன்றுதான். அது அன்னையின் கருவறைதான். எல்லா உயிரும் அந்த ஒரே இடத்தில் இருந்துதான் தோன்றுகின்றன. ஆனால் மரணம் எல்லோருக்கும் ஒரே மாதிரி வருவதில்லை. 280 நாட்களில் மனிதக் குழந்தை பிறக்கும். ஆனால் மரணத்திற்கு வயது கிடையாது. அது எப்போதும் வரலாம். எங்கு வேணுமானாலும் வரலாம். எப்படி வேண்டுமென்றாலும் வரலாம். அதனால் யார் யாருக்கு எப்படி என்பதை அவன் முடிவு செய்து வைத்திருப்பான். இங்கே மனிதனாலே அழிவு வரக் கூடாது என்று கேட்டவனே மனிதனாக வந்து அழிக்க வேண்டும். முன்னால் யார் யார் வரவேண்டும் தீர்மானிக்கப்பட்டு முழுமையாக அரங்கேற்றப்பட்டது தான் இராமநாடகம்.
நரசிம்ம அவதாரம் ஒரு வினாடி நேரத்தில் தோன்றிய அவதாரம். கிருஷ்ணாவதாரம் அவர்களுக்கு ஏற்ற மாதிரித் தங்களை மாற்றிக்கொண்ட அவதாரம். ஆனால், இராமாவதாரம் தானாகவே தீர்மானித்துக்கொண்டு வந்த அவதாரம், அப்படிப்பட்ட இராமன் சொல்கின்றான் `பூவுலகிலே கோசலத்தில் யுத்தமே இல்லாத அயோத்தியை தலைநகரமாகக் கொண்டு ஆளுகின்ற மாவீரன் தசரத மகராஜாவுக்கு மகனாக வந்து பிறக்கிறேன். நான் படுத்தால் பாயாக, அமர்ந்தால் சிங்காசனமாக, நின்றால் குடையாக, நடந்தால் மரவடியாக விளங்குகின்ற இந்த ஆதிசேஷன் இலக்குவனாக வருவான். சங்கும் சக்கரமும் பரதன், சத்துருக்கன் ஆக வருவார்கள். தேவர்கள் எல்லாம் குரங்குகளாகவும் கரடிகளாகவும் வரவேண்டும்'. யார் யார் எப்படிப் பிறக்க வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டார்.
சந்தேகம் வருகிறது. சந்தேகம் வந்தால்தான் அறிவு வளர்கிறது என்று அர்த்தம். எலும்பு முறிந்து போய் கட்டுப்போட்டால் கட்டவிழ்ந்தால் கை அரிக்க வேண்டும். அரித்தால்தான் அந்த இடத்தில் இரத்தம் ஊறுகிறது என்று அர்த்தம். கட்டவிழ்த்த பிறகு அந்த இடத்தில் சொரணை இல்லை என்றால் கை செத்துப்போய் விட்டது என்று அர்த்தம். படிக்கிறவர்களுக்கு அறிவிலே (நமச்சல்) சந்தேகம் வரணும். உலகிலே பல இடங்களிருக்க கோசலத்தை ஏன் இராமன் தேர்ந்தெடுத்தான்? சர்க்கரை வியாதிக்காரனை மிட்டாய்க்கடையில் வேலைக்கு அமர்த்த முடியாது. அதிகமாயிடும்.
இராமாவதாரம் ஒழுக்கத்தைக் காட்ட வந்தது. ஒருத்திக்கு ஒருவன் என்பது அன்றிலிருந்து இன்றுவரைக்கும் உள்ளது. தமிழரைப் பொறுத்தவரையில் எழுதப்படாத சட்டம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்றில்லை. ஆண் எத்தனை கல்யாணத்தையும் செய்யலாம். எத்தனை பெண்களோடும் வாழலாம் இது ஆணுக்கு வேற சட்டம். எப்போது ஒருத்தி ஒருவனோடு வாழ வேண்டும் என்று நினைக்கின்றோமோ அப்போது அந்த ஒருவனும் ஒருத்தியோடுதான் வாழ வேண்டும். ஒழுக்கத்திலே தவறும் ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்கிற தப்புக்கு இரண்டு பேருக்குமே தண்டனை உண்டு. இந்த ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்காகத்தான் இராமாவதாரம். அதற்காக வருகிறவன் இராமன். அதற்கேற்ற இடத்தில் அவன் போய் இருக்க வேண்டும். ஒரு மனிதனைக் கெடுப்பது இரண்டு விடயங்கள். ஒன்று பாரம்பரியம் இன்னொன்று சூழ்நிலை. பாரம்பரியம் நல்லதாகக் கூட இருக்கலாம். வளர்கின்ற, வாழுகின்ற சூழ்நிலை மனிதனை முழுமையாகக் கெடுத்து விடும். அதனால், ஒழுக்கத்தைக் காட்ட வந்த இராமன் கோசலத்தைத் தெரிவுசெய்கிறான். சாதாரண மனிதனாக வாழ வருகின்றான். அதே கோசலத்தை ஆளுகின்ற தசரத மகாராஜனுக்கு 60 ஆயிரம் மனைவிமார். 3 பட்டமகிஷிகள். இப்படிப்பட்ட தசரத மகாராஜாவிற்குப் பிள்ளையாகப் பிறந்து ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்து காட்டினானே அங்குதான் இராமனின் பெருமை உச்சத்திற்கு போகின்றது.
மனிதனைக் கண்டுபிடிக்க கடவுள் பல வழிகள் வைத்திருக்கிறார். எல்லாக் காக்கைகளும் கறுப்பு நிறம். கா, கா, என்றுதான் கத்துகிறது. எல்லா நாயும் வள், வள் என்று தான் குரைக்கிறது. எல்லா மாடுகளும் சைவம் தான். ஆபிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஏனைய நாடுகளிலும் இவ்வாறே. அமெரிக்காவில் மாடு பியர் குடிக்காது. மம்மி என்று கத்தாது. மிருகம், பறவை மட்டுமல்ல வேப்பந்துளிர் எல்லா நாடுகளிலும் கசப்புத்தான். கொய்யாப்பழம் எல்லா ஊரிலும் இனிப்புத்தான்.
இவை எல்லாம் ஆண்டவனால் படைக்கப்பட்ட காலத்தில் எவ்வாறு இருந்ததோ அப்படித்தான் இன்றும் இருக்கின்றது. இதில் மாறினது மனிதன்தான். கோபம் வந்தால் என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது என்று மனிதன் கூறுகின்றான். நாய் மாதிரிக் குரைப்பேனோ, கழுதை மாதிரி உதைப்பேனோ நமக்கே தெரியாது. நாம் தான் மாறுகின்றோம். நாம் கொள்ளையடிப்போம். அதனால் நம் கைகளிலே ரேகை வைத்துள்ளான். ஒருவரின் கைரேகை மாதிரி இன்னொரு ரேகை உலகிலே கிடையாது. ஒருவர் காதின் உள்வட்டம் மாதிரி உலகிலே இன்னொருவரின் காதில் உள்வட்டம் அமைவதில்லை. மனிதன் எல்லா தில்லுமுல்லுவும் பண்ணுவான் என்பது இறைவனுக்குத் தெரியும். கோவில்களில் பாருங்கள், எல்லா வாகனங்களும் இருக்கும். பெருச்சாளி, காகம், கருடன், எருது, யானை, பூதம் இவை எல்லாம் வாகனங்களாக இருக்கின்றன. உலகிலே எந்தக் கோவிலிலாவது மானுட வாகனம் என்று உண்டா என்று பாருங்கள். இல்லை. கடவுளுக்குத் தெரியும் மனிதனை வாகனமாகப் பாவித்தால் என்ன நடக்கும் என்பது. புத்தர் கையில் ஆட்டுக்குட்டி. யேசுபிரானின் கையில் ஆட்டுக்குட்டி, கிருஸ்ணரைக் சுற்றி ஆடு, மாடு- மனிதனைக் கிட்டே சேர்க்கவில்லை. ஆதிசங்கரர் கூறினார். "ஜீவன்களிலே மகாமட்டம் மனிதன்" என்று. மனிதனுக்கு எப்போது பெருமை? ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் உயர்ந்தவன், பக்தியோடு வாழ்ந்தால் மனிதன் உயர்ந்தவன், பரோபகாரம் செய்தால் உயர்ந்தவர்.
அக்பர் பாதுஷா நிற்கிறார், அருகில் அவரின் மந்திரி பீர்பால். வீதியால் மழையில் நனைந்து கொண்டு ஒருவன் செல்கிறான். விலை மதிப்பான அங்கவஸ்திரத்தைக் அவன் அணிந்துள்ளான். நடந்து சென்றவன் சேற்றினுள் காலை வைத்துவிட்டான். செருப்பில் சேறு, அங்கவஸ்திரத்தை கழற்றி அதனால் செருப்பில் உள்ள சேற்றைத் துடைக்கின்றான். பாதுஷா பீர்பாலைப் பார்த்து - "இவன் அறிவு கெட்டவனாக இருக்கின்றானே! 50 ரூபா பெறுமதியான செருப்பை அங்கவஸ்திரத்தினால் துடைக்கின்றானே" பீர்பால் "அவன் தான் அறிவுள்ளவன் மகாராஜா. காலில் போட்ட செருப்பு அவன் மாதாமாதம் உழைப்பில் மிச்சம் பிடித்து 50 ரூபாவுக்கு வாங்கியது. அவன் தோளில் போட்டிருக்கும் அங்கவஸ்திரம் அவனுக்கு அவனின் மாமனார் `ஓசியில்' கொடுத்தது. உழைத்த செருப்புக்கு மதிப்புத் தெரியுது. ஓசியில கிடைத்ததற்கு மதிப்புத் தெரியவில்லை"
பாடுபட்டுக் கிடைத்தால்தான் எதற்கும் மரியாதை. கஷ்டப்படாமல் கிடைத்ததிற்கு மதிப்புக் கொடுக்கமாட்டோம்.
குழந்தை ஆண்டவனால் கொடுப்பது. அதையும் பெற்று விடலாம் என்று கூறும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, கரு ஒன்றை ஆண்டவன் கொடுத்தால்தான், அதையும் ஒருதாயின் வயிற்றில் வைத்துத்தான் வளர்க்க முடியம். பானைக்குள் வைத்து வளர்க்க முடியாது. காரைக் கண்டுபிடிக்க முடியும். பெட்ரோலில் ஓடும் காரைக் கண்டு பிடிக்க முடியம். பெற்ரோல் ஏற்கனவே பூமிக்கு அடியில் உள்ளது.
ஆன்மிகத்தினால் உண்டாக்க முடியும். விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கத்தான் முடியும்"
தொகுப்பு: திருகோணமலை நிருபர்