Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
காலநிலை மாற்றத்தால் பேராபத்தில் சிக்கியிருக்கும் சிறுபான்மைக்குழுக்கள், ஆதிவாசிகள்
[17 - March - 2008] [Font Size - A - A - A]
* ஐ.நா.வின் உடனடிக்கவனம் அவசியம்

ஐக்கியநாடுகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு உலகின் சிறுபான்மைக் குழுக்களும் பூர்வீகக் குடியினருமே சத்தமின்றி பலியாகின்றனர் என்று சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் குழு (Minority Rights Group (MRG) International) மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

இரண்டு பிரிவினருமே காலநிலை சம்பந்தப்பட்ட அழிவுகளால் அடிக்கடி ஒப்பீடின்றி பாதிக்கப்படுகின்றார்கள் என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ள லண்டனில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச சமூகம் இவர்களது நிலை குறித்து கவனம் செலுத்துவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் ஆரம்பத்தில் இறுதியாக காலநிலை மாற்றம் இடம்பெற்றுள்ள போதிலும் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அழிவு இடம் பெற்றவுடன் காலநிலை மாற்றம் பற்றிய கொள்கை வகுக்கப்படும் வரை சிறுபான்மையினரதும் ஆதிவாசிகளினதும் தனித்துவமான நிலைமை குறித்து கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவது மிக அரிதாக இருக்கிறது என்று சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் குழுவின் கொள்கை, தொடர்பாடல் தலைவர் இஷ்பெல் மதேசன் தெரிவித்தார்.

இந்தியாவில் தீண்டப்படாதோர், பங்களாதேஷில் றக்கேயின் மீனவ சமூகம், கென்யாவில் பஸ்ரோறல் எனப்படுவோர், உகண்டாவில் கர்மஜோங் சமூகத்தினர், கொலம்பியாவில் ஆபிரிக்க கொலம்பியர்கள், ஐரோப்பாவில் றோமா சமூகத்தினர், வட நோர்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் சமி மக்கள் ஆகியோர் வசதி குறைந்த மக்களாக கருதப்படுகிறார்கள்.

2007 ஆம் ஆண்டு இடம் பெற்ற வெள்ளப்பெருக்கினால் இந்திய மாநிலமன பீஹாரில் தீண்டப்படாதோர் ஒப்பீடின்றி பாதிக்கப்பட்ட போது மிகத் தாமதமாகக் கிடைத்த நிவாரணமும் பாரபட்சமாகவே விநியோகிக்கப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆதிவாசிகளுக்கும் சில சிறுபான்மைக் குழுவினருக்கும் அவர்களது சுற்றாடலுடன் இருக்கும் நெருங்கிய தொடர்பு காரணமாக காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அவர்கள் எளிதில் உணர்ந்துவிடுகிறார்கள்.

காலநிலை பற்றியும் செடிகளிலும் மிருகங்களிலும் காலநிலையினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஆதிவாசிகள் அதிசிறந்த அறிவைக் கொண்டுள்ளார்கள். ஆனால், தற்போது காலநிலை மாற்றத்தினால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.

உகண்டாவின் கர்மஜோங் சமூகத்தைச் சேர்ந்த டேவிட் புல்கோல் கூறுவதாவது;

`இயற்கையின் சில அறிகுறிகளைக் கொண்டு எமது சமூகத்திலுள்ள முதியவர்கள் பயிர்களை நாட்டுவது எப்போது, வேட்டை ஆரம்பிப்பது எப்போது என்று கூறுவார்கள். ஆனால், தற்போது காலநிலை மாற்றம் காரணமாக அவர்களால் இத்தகைய எதிர்வு கூறல்களை மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

வழமைக்கு மாறாக வரட்சி நீடித்ததால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், தங்கள் சமூகத்தில் வறுமையும் பட்டினியும் தாண்டவமாடியதாக புல்கோல் தெரிவித்தார். வளிமண்டலத்தில் கரியமில வாயுவையும் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களையும் அதிகரிக்கும் வகையில் உக்கிய பொருட்களை எரிப்பது போன்ற மாசு பரப்பும் நடவடிக்கைகளால் பூமி வெப்பமடைவதுடன், தீவிர காலநிலை நிகழ்வுகளும் ஏற்படுகின்றன என்று காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையிலான குழு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் நிலை குறித்து கவனம் செலுத்துவதில் ஐக்கியநாடுகள் ஸ்தாபனமும் அதன் சுற்றாடல் அமைப்புகளும் நிச்சயம் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று மதேசன் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அண்மைக்காலம் வரை பூமி வெப்பமடைவது பற்றிய பிரச்சினை, அநேகமாக எவர்கள் பூமியை வெப்பமடையச் செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்தே கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஐக்கியநாடுகள் ஒழுங்கு செய்யும் பேச்சுவார்த்தைகள் காபனீரொக்சைட்டின் மட்டத்தையும் அவற்றின் விளைவுகளையும் குறைப்பது பற்றியதாக இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

இது உண்மையில் முன்னுரிமை விடயமாகும் ( காலநிலை மாற்றம் பற்றிய கியோட்டோ ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்டவையாகும்). ஆனால், பூமி வெப்பமடைவதன் உண்மையான விளைவுகள் ஏற்கெனவே மனித மட்டத்தில் உணரப்பட்ட நிலையில், சுற்றாடல் தாக்கத்திற்கு அப்பால் சமூகங்கள் மீதான தாக்கங்கள் பற்றியும் சிறுபான்மையினர் மற்றும் ஆதிவாசிகள் உட்பட எந்த சமூகங்கள் ஒப்பீடின்றி பாதிக்கப்படுகின்றன என்பது பற்றியும் கொள்கை ஆக்காளர்கள் கவனிக்க வேண்டும் என்றும் மதேசன் கூறினார்.

ஆதிவாசிகள் தொடர்பான ஐக்கியநாடுகள் நிரந்தரப் பிரிவு ஏற்கெனவே இந்த விடயம் பற்றி கவனம் செலுத்தியுள்ளது என்றும் இது சம்பந்தமாக பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தொடக்கம் மே 2 வரை நடைபெறவிருக்கும் நிரந்தரப் பிரிவின் 7 ஆவது கூட்டத் தொடரில் காலநிலை மாற்றம், உயிரியல் கலாசார பன்முகக் தன்மை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியன பற்றி கவனம் செலுத்தப்படும்.

காலநிலை மாற்றம் ஒரு முக்கிய உலக சவால் என்று கருதப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தினால் உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களை எடுத்துக் காட்டியுள்ளன என்று அடுத்த மாதம் நிரந்தர பிரிவு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கும் ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆதிவாசிகளை பொறுத்த வரையில் காலநிலை மாற்றம் அவர்களது சமூகங்களுக்கு ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.

காலநிலை மாற்றத்தினால் பாரதூரமான பொருளாதார, சமூக தாக்கங்களும் ஏற்படுகின்றன என்றும் அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது.

அடிப்படையாக காலநிலை மாற்றம் அபிவிருத்திக்கான ஒரு நிரந்தர சவாலாக இருக்கிறது. வறுமை ஒழிப்பு மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி, குறிக்கோள்கள் ஆகியன உட்பட பரந்த அளவிலான அபிவிருத்தித் திட்டங்களுடன் இது சம்பந்தப்பட்டதாகும்.

கடந்த செப்ரெம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் மகாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பல பிரதிநிதிகள் ஆதிவாசிக் குழுக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் ஓரின பயிர்ச் செய்கை, பெருமளவிலான குடியேற்றம், தரம் குன்றிய நீர், உணவுப் பாதுகாப்பு, மனித சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகியன அடங்கும் என்று சுட்டிக்காட்டினர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற ஆதிவாசிகள் பற்றிய சர்வதேச நிபுணத்துவ செயலமர்வு ஒன்றில் சுற்றாடல் மாசடைதல், ஆதிவாசிகளின் காணிகளுக்குள் நச்சுப் பொருட்களை வீசி எறிதல் ஆகியன உட்பட சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

காலநிலை மாற்ற பிரச்சினைக்கு ஒரு தீர்வு உயிரியல் பசளையை பயன்படுத்தக் கூடிய பயிர்களை செய்கைபண்ணுவதே என்று பல அரசாங்கங்களால் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவும் பூர்வீக மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு தீங்கையே விளைவித்துள்ளது என்று சர்வதேச சிறுபான்மை உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தானிய அல்லது பாம் மரங்கள் போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் உயிரியல் எரிபொருட்கள் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளிவிடுவதால் இவற்றினால் தீங்கு ஏற்படாது.

ஆனால், உயிரியல் பசளை பயன்படுத்தப்படுவதால் சமூகங்கள் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதுடன், அவற்றின் வாழ்வாதாரங்களும் கலாசாரங்களும் அழிக்கப்படுகின்றன என்று அறிக்கை கூறுகிறது.

பிரேஸில், ஆர்ஜன்ரீனா போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும் மற்றும் கம்போடியாவிலும் இப்பயிர்ச் செய்கைக்காக பழங்குடி மக்களும் சிறுபான்மையினரும் அவர்களது காணிகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

சமூக தனிமைப்படுத்தல் மற்றொரு விடயமாகும். கென்யாவில் அண்மையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வரட்சியால் பசும் புற்களை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கென்ய அரசாங்கம் இந்த பின்தங்கிய பகுதிகளை அலட்சியம் செய்ததாலும் வரட்சி நிவாரண திட்டங்களை வெற்றிகரமாக அமுல்செய்யத் தவறியதாலும் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உயிரியல் பசளைப் பயிர்கள் திடீரென அதிகரித்ததால் பிரச்சினை ஏற்பட்டது. உதாரணமாக, கொலம்பியாவில் 2005 ஆம் ஆண்டளவில் எண்ணெய் தரும் பாம் மரங்கள் நாட்டப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான காணிகள் ஆபிரிக்க கொலம்பியர்களுக்கு சொந்தமாக இருந்தன.

பாம் மர கம்பனிகள் சுவீகரிப்புக்காக சென்ற போது துணைப் படைக் குழுக்கள் ஒன்று சேர்ந்ததால் பலவந்த இடப்பெயர்வுகள் இடம்பெற்றன என்று மதேசன் கூறினார்.

அபிவிருத்தி மிகக் குன்றிய 50 நாடுகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக ஐக்கியநாடுகளின் அனுசரணையுடன் தேசிய செயற்திட்டம் ஒன்றை தயாரித்து வருகின்றன.

ஆனால், இந்நாடுகள் சிறுபான்மையினரினதும் ஆதிவாசிகளினதும் விசேட தேவைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

ஐக்கியநாடுகள் சுற்றாடல் திட்டப் பிரிவும் ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டப் பிரிவும் அவற்றின் சுவீகரிப்புக் கொள்கையை தயாரிக்க அபிவிருத்தி குன்றிய நாடுகளுடன் இணைந்து செயல்படும் முன்னணி ஐக்கியநாடுகள் நிறுவனங்களாகும்.

இவைகளும் பங்களாதேஷின் றககெயின் சமூகத்தினர் போன்ற சிறுபான்மையினர் மீதான தாக்கத்தை அவதானிக்க வேண்டும். காரணம், இந்த சமூகங்களின் வாழ்வாதாரமும் கலாசாரமும் மாத்திரமன்றி அவற்றின் வாழ்க்கையே ஆபத்தில் இருக்கிறது என்று மதேசன் தெரிவித்தார்.

- ஐ.பி.எஸ். -

Email this page Your Opinion Print this page
காலநிலை மாற்றத்தால் பேராபத்தில் சிக்கியிருக்கும் சிறுபான்மைக்குழுக்கள், ஆதிவாசிகள்
`ஆன்மீகத்தால் உண்டாக்க முடியும் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க இயலும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com