கம்பளை செல்ல வேண்டிய சில பயணிகள், கொழும்பு புகையிரத நிலையத்தில் கண்டி கடுகதி புகையிரதத்துக்கு டிக்கெட் வாங்குவதற்காக கருமபீடத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சிலர் வந்து, "புகையிரதம் புறப்படுவதற்குச் சில நிமிடங்களே இருக்கின்றன, உடனே உள்ளே வாருங்கள்" என்று அவர்களை அழைத்துச் சென்றனர். புகையிரதத்தின் சிற்றுண்டி பெட்டியில் ஏறுங்கள், டிக்கெட்டுகளை தருகிறோம் என்று அவர்கள் கூறியதும் பயணிகள் அப்படியே செய்தார்கள். அப்போது தலா நூறு ரூபாவை வசூலித்துக் கொண்டனர். ஆனால், டிக்கெட் வழங்கப்படவே இல்லையாம்.
புகையிரதம் பேராதனை புகையிரத நிலையத்தை வந்தடைந்ததும் பின்பக்கமாக அதாவது மலைப்பக்கமாக இறங்கிப் போகும்படி அந்தப் பயணிகளிடம் கூறப்பட்டதாம்.
தாங்கள் எவ்வளவோ அவதிப்பட்டு, கம்பளை வந்து சேர்ந்ததாக ஒரு பயணி அழாக் குறையாகச் சொன்னார்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆகவே, ஏமாளிகளாக இருக்காதீர்கள்.