உலகிலுள்ள இனக் குழுமங்களில் அதிகளவில் மாரடைப்பு நோயால் மரணமடைவது தெற்காசிய நாட்டவர்களே என்ற அதிர்ச்சித் தகவலொன்று அண்மையில் வெளியாகியுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவற்றை தாயகமாகக் கொண்ட மக்கள் ஏனைய இனக்குழுமங்களிலும் பார்க்க 5- 10 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விடுவதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
தெற்காசியர்களுக்கு மாத்திரம் ஏன் மாரடைப்பு நோய் அதிகளவுக்கு ஏற்படுகின்றது என்பதற்கான காரணத்தை கண்டறிவதில் ஆராய்ச்சியாளர்கள் தற்போது முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். தெற்காசியாவைச் சேர்ந்த நபரொருவரின் மரபணுவுக்கும் அவரின் வாழ்க்கை முறைமைக்கும் இடையிலான தன்மைகளை இனங்கண்டு சிறப்பான முறையில் எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது குறித்தும் வழிகாட்டல்களை வழங்குவது குறித்தும் இப்போது கவனம் செலுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மாரடைப்புநோய் அதிகமாக தாக்குவது தொடர்பான விழிப்புணர்வை தெற்காசிய சமூகத்தவர்களிடையே ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமென நிபுணர்கள் கருதுகின்றனர். ஸ்கார்பொரோவைச் சேர்ந்த இதய சத்திரசிகிச்சை நிபுணரான விவியன்ரம்பி கார் என்பவர் இதய நோய் சம்பந்தமாக அதாவது மாரடைப்பு அதிகளவில் தாக்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக `இதயத்திற்காக இரு நிமிடங்கள்' நிகழ்ச்சியை ஆரம்பித்து அறிவூட்டலை வழங்குவதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி, திருமணவைபவம், அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக குறிப்பாக இதய ஆரோக்கியம் தொடர்பாக குறைந்தது இரு நிமிடங்களாவது பேசுவது என்பதே இந்தத் திட்டமாகும்.
தெற்காசியர்களே அதிகளவில் மாரடைப்பால் மரணமடைவதாக அண்மையில் `ஸ்ரார்' பத்திரிகையே முதலில் எச்சரிக்கை விடுக்கும் செய்தியை வெளியிட்டிருந்தது. மக் மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க மருத்துவ சங்க வெளியீடுகளில் இந்த ஆபத்துப் பற்றி ஆய்வுக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
பருத்ததொந்தி, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் அதிகரித்து காணப்படுதல், நீரிழிவு என்பனவே தெற்காசிய சமூகத்தின் இதயச் செயற்பாட்டு முறைமையை கடுமையாக தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தமும் நீரிழிவுமே தெற்காசியரின் இதயம் சார்ந்த முறைமைக்கு அதிகளவு கேடு விளைவிப்பதாக கனடாவைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் சுபோத் வர்மா தெரிவித்திருக்கிறார். முன்கூட்டியே பரிசோதனை செய்வதன்மூலம் மாரடைப்பு வருவதற்கு முன்னராக பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென அவர் நம்புகிறார்.
உலகிலுள்ள ஏனைய இனக்குழுமங்களிலும் பார்க்க தெற்காசியரின் உடல் உறுப்புகள் ஒப்பீட்டளவில் பருமனாக இருப்பதாகவும் அவர்கள் உணவருந்தும் அதே அளவுக்கு பயிற்சியில் ஈடுபட்டாலும் உடல் உறுப்புகளின் பருமன் பெரிதாகக் காணப்படுவதாக இனத்துவத்திற்கும் இதய நோய் மற்றும் நீரிழிவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த நிபுணரான மக் மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சோனியா ஆனந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையரைப் பொறுத்தவரை முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்வதென்பது தாழ்ந்த மட்ட, நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்தோருக்கு நடைமுறைச் சாத்தியமில்லாத விடயமாகும். பொருளாதார வசதி படைத்தோரே நோய் வருமுன் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
நாட்டில் அரசாங்க மருத்துவமனைகள் இருக்கின்ற போதிலும் அங்கு போதிய உபகரணங்களோ, மருத்துவர்களோ, நவீன வசதிகளோ கொழும்பு போன்ற இடங்களைத்தவிர ஏனைய இடங்களில் இல்லை.
ஆனால், மாரடைப்பு நோயாலேயே அதிகளவானோருக்கு ஆபத்து என்ற விழிப்புணர்வை சமூகத்தின் சகல மட்டத்திற்கும் இலகுவாகக் கொண்டு செல்ல முடியும். சமூக மட்டத்தில் இடம்பெறுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை இதற்குரிய களமாக பயன்படுத்த முடியும்.
மேலும், மாரடைப்பு அதிகளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக, இலங்கையர் உட்பட தெற்காசியர் மத்தியில் அதிஉயர் இரத்த அழுத்தமே காரணமென கூறப்படுகிறது. இதற்கும் இலவசமான சிகிச்சை முறையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
`உயர் அழுத்தம்' தொடர்பான அமெரிக்க சஞ்சிகையின் இம்மாத (மார்ச்) வெளியீட்டில் கென்டுக்கி பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வறிக்கையொன்று வெளியாகியுள்ளது. அதில் உடல், உள ரீதியான ஆறுதலைப் பெறுவதற்கு தியானமே சிறந்த சிகிச்சையென சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தியானமானது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளிலிருந்தும் தப்புவதற்குரிய அனுகூலத்தை தருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சிகிச்சையல்லவா? யாவரும் முயன்று பார்க்கலாம்தானே.