* கலவரத்தில் 10 பேர் உயிருடன் தீ வைப்பு
திபெத் மீதான நிலைப்பாட்டை சீனா மாற்றாவிடில் மேலும் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்படலாமென திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா அச்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை திபெத்தின் லஹாசா நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்ந்த உயிரிழப்புக்கள் குறித்து தலாய் லாமா கடும் விசனம் தெரிவித்துள்ள போதும், இவ்வருட நடுப்பகுதியில் சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தான் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் 10 பேர் உயிருடன் எரித்துக் கொளுத்தப்பட்டதுடன் அதிகளவான வாகனங்கள் மற்றும் கடைகள் என்பனவும் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இக்கலவரத்தில் 30 பேர் வரையில் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
அத்துடன், 100 பேர் வரையில் பலியாகியிருக்கக் கூடுமென உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சீனாவுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று திங்கட்கிழமைக்குள் சரணடைய வேண்டுமென திபெத் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1959 இல் சீனாவுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியின் 49 ஆவது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே அங்கு வன்முறைகள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து அங்கு பல கடைகள், வங்கிகள் மற்றும் ஹோட்டல்கள் என்பன தீ வைத்துக் கொளுத்தப்பட்டதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோர் மீதும் வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கலவரங்கள் திபெத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவினாலேயே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ள அதேவேளை, தலாய் லாமா இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
இதேவேளை, புதுடில்லியிலுள்ள சீனத் தூதரகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட முயன்ற 50 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சீனாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு செயற்படுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.