நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதுடன் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், வத்தளை, நீர்கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் வீடுகள், பாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
இது குறித்து இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் என்.யூ.வெத ஆராய்ச்சி தகவல் தருகையில்;
"கடந்த 36 மணித்தியாலயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கடும் மழையினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகங்கள் எமக்குத் தகவல் அனுப்பியுள்ளன.
நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரமல்லாது, சகல பிரதேசங்களுமே மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களை தற்போது சேகரித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் பொதுவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மழை தொடர்ந்து பெய்து வருவதனால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில பிரதேசங்களில் வெள்ள நீரை வழிந்தோடச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழையினால் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டமைக்கான தவல்கள் எதுவும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தாழ் நிலப் பிரதேசத்து மக்களும், கரையோர மற்றும் ஆற்றங்கரையோர பிரதேச மக்களையும் விழிப்புடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோருகிறது" என்றார்.
இதேவேளை, கடும் மழையினால் பிர தேசங்கள் சிலவற்றில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்சார, தொலைபேசி கம்பங்கள் உடைந்து வயர்களும் அறுந்து விழுந்துள்ளன. அத்துடன், வெள்ளத்தினால் பாதைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
இதேசமயம், நிவாரண நடவடிக்கைகளுக்காக பிரதேச செலயகங்களுக்கு நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் எம்.ஆர்.எம். ராசிக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். அதன் பின் ஒரு வாரத்திற்கு உலருணவு வழங்கப்படும்.
சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்க எமது அமைச்சு உதவும். சேதங்கள் ரூபா 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவைகள் என்றால் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானிக்கபபட்டுள்ளது.