Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
அநுரா காலமானார்
[17 - March - 2008] [Font Size - A - A - A]
அநுரா காலமானார்

இலங்கையின் இரு முன்னாள் பிரதமர்களின் ஏக புதல்வரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் சகோதரருமான அநுரா பண்டாரநாயக்கா எம்.பி. (59 வயது) நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் கொழும்பு விசும்பாயாவிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலமானார்.

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அநுரா பண்டாரநாயக்கா, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின் இருநாட்களுக்கு முன்னரே வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் சிங்கப்பூரிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது. ஆயினும், எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அவர் நேற்று பிற்பகல் மரணமடைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினதும் உலகிலேயே முதலாவது பெண் பிரதமர் என்ற புகழைப்பெற்றவருமான திருமதி சிறிமாவோ ரத்வத்தை பண்டாரநாயக்காவினதும் ஏக புதல்வரான அநுரா பிரியதர்ஷன பண்டாரநாயக்கா 1949 பெப்ரவரி 15 இல் பிறந்தவராவார்.

கொழும்பு றோயல் கல்லூரியிலும் பின்னர் இங்கிலாந்திலும் கல்வி கற்ற அநுரா பண்டாரநாயக்கா, 1970களில் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக பதவி வகித்த காலத்தில், தனது இளம் வயதில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணிக்கு தலைமை தாங்கியதுடன், அரசியல் பணியிலும் முழுமூச்சாக ஈடுபட ஆரம்பித்தார்.

நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியின் இரண்டாவது எம்.பி.யாக 1977 இல் தெரிவான அநுராபண்டாரநாயக்கா தாயாரின் குடியுரிமை ஜே.ஆர்.ஜயவர்தனாவின்

ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1983 - 1988 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணிபுரிந்தார்.

ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் (1993 இல்) தனது தந்தையார் உருவாக்கியதும் தாயார் தலைவியாக இருந்து வழிநடத்தியதுமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவெளியேறி ஐ.தே.க.வில் இணைந்து உயர்கல்வி அமைச்சரானார். தனது சகோதரியான சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் (1994 - 2005) 2000 ஆம் ஆண்டு சபாநாயகராகவும் அநுரா பண்டாரநாயக்கா பதவி வகித்தார்.

தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மறைவின் பின்னர் ஒருவருடத்தில் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட அநுரா பண்டாரநாயக்கா, தமக்கையாரின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மரணமடைந்ததையடுத்து சிறிது காலம் வெளிவிவகார அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

2001 டிசம்பரிலிருந்து 2004 வரையிலான ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் எம்.பி.யாக இருந்த அதேசமயம், ஜனாதிபதி சந்திரிகாவின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் உல்லாசப் பயணத்துறை அமைச்சராகவும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

தற்போதைய ஆட்சியில் அமைச்சர் பதவியிலிருந்து ஒருதடவை அவர் அகற்றப்பட்டு பின்னர் வழங்கப்பட்டது.

கடந்த வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி ஆசனத்திற்குச் சென்று அமர்ந்துவிட்டு வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டார். அதன் பின்னர் 3 மாதவிடுமுறையில் அவர் சென்றிருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு மேலும் 3 மாதங்கள் விடுமுறை வழங்க பாராளுமன்றம் கடந்த வாரம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

மனதில் பட்டதை சடுதியாக வெளிப்படுத்தும் அநுரா பண்டாரநாயக்கா, பாராளுமன்ற விவாதங்களின் போது பல்வேறு விடயங்களை ஆழ்ந்த புலமையுடன் வெளிப்படுத்தி சபையை தன்வசம் ஈர்த்து வைத்திருக்கும் திறமையை பெற்றிருந்தவராவார்.

இந்தியாவின் நேரு- காந்தி, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பங்களுடன் இலங்கையின் பண்டாரநாயக்கா குடும்பத்தை சமாந்தரப்படுத்திப் பேசப்படுவதுண்டு. அவரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் இச்செய்தி எழுதும்போது அறிவிக்கப்படவில்லை.

அநுராவின் மறைவுச் செய்தியை கேள்வியுற்றதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக விசும்பாயாவுக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com