Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
அர்த்தமற்ற தேசியக் கொள்கை?
[18 - March - 2008] [Font Size - A - A - A]
இலங்கையின் இன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் நாட்டு மக்களை பாரியதொரு நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன. முன்னொரு போதும் கண்டிராத அவலநிலைக்கு நாடு சென்று கொண்டிருக்கின்றது. கட்சி அரசியல் கலாசாரம் காரணமாக மாறி மாறி வரும் அரசாங்கங்களினால் மக்கள் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் கால வாக்குறுதிக் கலாசாரத்தை நம்பி நம்பியே மக்கள் ஏமாந்துகொண்டிருக்கின்றனர். முன்வைக்கப்படுகின்ற செயற் திட்டங்கள் எதுவுமே கொள்கைப் பிடிப்புள்ளதாகக் காணப்படுவதில்லை. அவை அனைத்துமே சந்தர்ப்பவாத கொள்கைத் திட்டங்களாகவே அமைந்து பின்னர் மறக்கப்பட்டு விடுகின்றன. இந்த நிலைப்பாட்டிலிருந்து நாடு விடுபட வேண்டுமென்று பலரும் சிந்தித்தாலும் கூட அது சாத்தியப்படாதவொன்றாகவே காலம் கடந்து கொண்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவைச் சேர்ந்த மங்கள சமரவீரவுடன் இணைந்து தேசத்துக்கான புதியதொரு தேசியக் கொள்கைத் திட்டத்தை வகுப்பதற்கான முயற்சிகளிலீடுபட்டுள்ளார். இத்திட்டம் வரவேற்கப்படக்கூடியதுதான். ஆனால், வகுக்கப்படுகின்ற கொள்கைத் திட்டமானது தனிமனப் போக்கைக் கொண்டதாக அமைந்துவிடாமல் நீண்டகால இலக்கைக் கொண்டதாகவும் அனைத்து மக்களதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாகவும் அமைய வேண்டியது மிக முக்கியமானதாகும்.

இரண்டு கட்சிகள், மூன்று கட்சிகள் ஒன்றுபட்டு பொதுக் கொள்கைத் திட்டத்தை வகுக்க முற்படுவது கூட வெற்றியளிக்கக்கூடியதென்று எதிர்பார்க்க முடியாது. அது யதார்த்தமும் ஆகிவிடாது. குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றுபடுத்தி மக்கள் சமூகத்தின் எதிர்பார்புகளை உள்வாங்கியதாக அந்தக் கொள்கைத் திட்டம் தயாரிக்கப்படுவதன் மூலமே ஆரோக்கியமான முயற்சியாக அதனை நோக்கக்கூடியதாக இருக்கும். இதனை வெறுமனே அரசியல் கொள்கையாக வகுப்பதாலும் எதுவும் நடந்துவிட முடியாது. பதிலாக நிரந்தரமான தேசியக் கொள்கையாக பிரகடனப்படுத்தக்கூடிய விதத்தில் காத்திரமான கொள்கைத் திட்டமாக அது வகுக்கப்படுவதை அனைத்துத் தரப்புகளும் உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தரப்பினரிடமும் காணப்பட வேண்டும்.

நல்ல நோக்கத்தோடு இக்காரியம் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே அதன் எதிர்காலம் பலம் கொண்டதாக அமைய முடியும் அன்றி அரசாங்கத்தை வீழ்த்தி விடவும் ஜனாதிபதியை வீட்டுக்கனுப்பவும் மட்டும் இக்கொள்கைத் திட்டம் தயாரிக்கப்படுமானால் வந்துபோன கொள்கைத் திட்டங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்க முடியாது. எமது நாடு இன்றுவரை முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வந்து நல்லாட்சியொன்றை உருவாக்குவதற்கு தங்களது மனப் போக்கில் சொற்ப நேர்மையைக் காட்டிவிட்டால் மட்டும் போதுமானதாக அமையாது என்பதை ரணில் விக்கிரமசிங்கவும், மங்கள சமவீரவும் மானசீகமாக உணர முற்பட வேண்டும். எமது நாடு தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு நாட்டை ஆள, ஆண்ட ஒவ்வொரு அரசுகளும் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளனர். ஒருவர் கூட இதிலிருந்து தப்ப முடியாது. காகிதத்துண்டு மூலம் காட்டு தர்பார் நடத்தியவர்களும் இதில் உள்ளடக்கப்படவே செய்கின்றனர்.

ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் கட்சி ரீதியிலுவும் தம்மை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி தவறை உணர்ந்து அதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதை விடுத்து வெறுமனே போலித் தனமாக தம்மை நேர்மையாளராக காட்டிக் கொள்ள முயற்சித்தால் அதை விட முட்டாள் தனம் வேறேதுவும் இருக்க முடியாது. இன்று எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் மட்டும் காணப்படவில்லை. அரசியல் கட்சி முறை, நீதித்தறை, அதிகார இயந்திரம் அனைத்துமே நிறைவேற்று அதிகாரமாகவே மாறிப்போயுள்ளது. இதனூடாக முழுநாடும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் சாய்ந்து கொண்டே போகின்றது.

நாட்டின் அரசியல் பாதையில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் அரசியலமைப்பு நடைமுறை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இன்று அரசியலமைப்பை விட அதிகாரம் நிறைவேற்று அதிகாரபீடத்திடம் காணப்படுகிறது. அரசியலமைப்புக்கு அதிகாரமிருப்பதாக கூறப்படுவது போலித்தனமான வார்த்தையாகவே காணமுடிகிறது. இதன்காரணமாகவே இன்று எமது நாட்டில் ஒரு காட்டு தர்பார் நடந்து கொண்டிருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நீக்குவதற்கு பலம்வாய்ந்த சக்தி அரசியலமைப்பில் காணப்படாமை போன்றே கட்சித் தலைவர்களை நீக்கும் உறுதியான திட்டம் எந்தவொரு கட்சியிலும் காணப்படாமையும் ஜனநாயக அரசியலில் புளித்துப்போனதொன்றாகவே பார்க்க முடிகிறது. நாட்டை மாற்றியமைப்பதற்கு முன்னர் கட்சித் தலைமைகள் கட்சியில் சீரமைக்கப்பட வேண்டும். தமது நிலைப்பாடுகள், கொள்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர உட்பட ஒவ்வொரு தலைவர்களும் உணராதவரை நல்லாட்சிக்கான தேசிய கொள்கை என்பது அர்த்தமில்லாத ஒன்றாகவே அமையும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com