சர்வதேச அளவில் பலகோடிக் கணக்கானோரை காசநோய் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டிலேயே இவ் எச்சரிக்கை விடப்பட்டிருப்பதுடன், இம்மாநாட்டில் 130 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நோயின் தாக்கம் பெரிதும் தொழிலாளர்களை பாதிப்பதால் வர்த்தக ரீதியில் உலக நாடுகள் பெரும் சரிவைச் சந்திக்கும் நிலை ஏற்படும் என்றும் அம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
தொழில் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் கடந்தாண்டு இறந்தவர்களில் நான்கில் மூன்று பங்கினர் மரணத்துக்கு காசநோயே காரணமாக இருந்துள்ளது.
15 வயது முதல் 54 வயதுள்ளவர்களை காசநோய் தாக்குகிறது. அடுத்த ஐந்தாண்டில், இந்த நோயின் பாதிப்பு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அதனால், வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 2006 ஆம் ஆண்டில் 16 இலட்சம் பேர் இறந்துள்ளனர். இவர்களில் 98 சதவீதம் பேர், இந்தியா போன்ற ஆசிய நாடுகளையும், ஆபிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வர்த்தகம், அவற்றின் ஊழியர்களுக்கு ஏற்பட்ட எயிட்ஸ் போன்ற நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காசநோய் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளை பிளேக் என்று சொல்லப்படும் காசநோய் பரவுவதை தடுக்க, பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளும் முழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.