பாகிஸ்தானின் பிரதமர் தேர்வுக்கான பட்டியலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரியின் சகோதரியான அஸ்ரா பெஷாஹோவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ள போதும் அக்கட்சியிலிருந்து பிரதமர் ஒருவரைத் தேர்வு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக மகதூம் அமீன் பாஹிம், சௌத்ரி அகமது முக்தர், ஷா மெகமூத் குரோஷி, யூசுப் ரஸா கிலானி ஆகியோர் ஏற்கெனவே பிரதமர் வேட்பாளர் போட்டிக்களத்தில் உள்ள நிலையில் சர்தாரியின் சகோதரியான அஸ்ரா பெஷாஹோவும் தற்போது சேர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பிலான பிரதமர் வேட்பாளர் போட்டியில் சர்தாரியின் சகோதரியின் அஸ்ரா பெஷாஹோவும் உள்ளார் எனத் தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் நபீல் கபோல் மேலும் தெரிவிக்கையில்;
மேற்கூறப்பட்டவர்களில் ஐந்து நபர்களில் ஒருவர் தான் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவார். இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
தங்களது கட்சி சார்பிலான பிரதமர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.