மழையைக் கொடுக்கும் பக்டீரியா எதுவென்று அமெரிக்காவின் மொன்டானா மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் பக்டீரியாவின் பெயர் மேலும் பல ஆய்வுகளை நடத்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படவுள்ளது.
இந்த பக்டீரியா உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. தாவரத்தின் இலை மீது இவை தங்கியிருக்கும். இவை விண்ணில் பறந்து சென்று ஒரு கூட்டமாக நிலைபெறும். இவற்றைச் சுற்றி உறைந்த பனிக்கட்டிகள் சேரும். அந்தப்பரப்பே இறுகி மேகமாக மாறும். பிறகு அதில் மேலும் பல மடங்கு நீர்த்துளிகள் சேர்ந்து கருமேகமாகி மழை பெய்யும்.
அமெரிக்காவிலேயே மொன்டானா, கலிஃபோர்னியா, கிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மொராக்கோ, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளிலும் கூட இந்த பக்டீரியா காணப்படுகிறது.
வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் இந்த பக்டீரியாவைக் கொண்டுபோய் விட்டால் மழை பெய்யும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அமெரிக்காவின் மொன்டானா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பை `சயின்ஸ்' என்ற பத்திரிகையில் சமீபத்தில் பிரசுரித்துள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் சேண்ட்ஸ் இந்த பக்டீரியாக்கள் குறித்து விளக்கும்போது இவை 84 டிகிரி பரனைட்டுக்கு மேல் வெப்பம் இருந்தால் வளராது என்கிறார்.
மேகம் குளிர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தவுடன் இந்த பக்டீரியாக்கள் அவற்றிலிருந்து இறங்கி ஏதாவது ஒரு தாவரத்தின் இலை மீது படிந்து அங்கேயே தங்கிவிடும். சில வேளைகளில் எந்த தாவரத்தின் மீது விழுந்ததோ அதன் இலையிலிருந்து தனக்கு வேண்டிய உணவை எடுத்துக்கொண்டுவிட்டு அதை அழுகும்படி விட்டுவிடும். மழை பெய்யும்போதெல்லாம் இந்த பக்டீரியா தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.