கொங்கோவின் மேற்குப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போராளிகள் குழுவைக் கொண்டுள்ள அரசியல் மற்றும் மத அமைப்பான புந்து டியா கொங்கோவின் உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதல்களில் மேலும் அதிகளவானோர் காயமடைந்துள்ளனர்.
அரசாங்கம் நிர்வாக ஒழுங்கீனத்திலும் ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இவ் அமைப்பு மேற்குப் பகுதியில் தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறது.
இம்மாத முற்பகுதியிலிருந்து அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் 68 பேர் பலியாகியுள்ளதுடன், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
அங்குள்ள ஆறுகளில் அதிகளவான உடல்கள் மிதப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐ.நா.வின் அறிக்கை, பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமெனத் தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் புந்து டியா கொங்கோ என்ற அமைப்பின் உறுப்பினர்களால் கொங்கோ இராணுவத் தளபதியொருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இக் குழுவினருக்கெதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ள கொங்கோ பொலிஸார் இவர்களுக்குச் சொந்தமானதெனக் கருதப்படும் தேவாலயங்கள் மற்றும் வீடுகள் என்பவற்றை அழித்துள்ளனர்.
அத்துடன், அரசின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வரை இவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடருமெனவும் அறிவித்துள்ளனர்.
இம் மோதல்கள் ஆரம்பமானதிலிருந்து சிறுவர்கள் உட்பட அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் வெட்டுக் காயங்களும் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சிலர் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் சுமார் 200 ஐ.நா.வின் அமைதிப் படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதும், இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.