* பலர் காயம்; படைத்தரப்பு தெரிவிப்பு
வடக்கே நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் களமுனைகளிலும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சமர் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் எட்டுப்படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த படையினர் முப்பதிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மணலாறு ஜனகபுர பகுதியில் இடம்பெற்ற மோதலில் இரு படையினர் கொல்லப்பட்டும் நால்வர் படுகாயமடைந்துமுள்ளனர். இதேநேரம், மன்னார் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற மோதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டும் இருவர் படுகாயமடைந்துமுள்ளனர்.
அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேநேரம், யாழ்.குடாநாட்டில் முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் ஞாயிறு காலை 8.20 மணியளவிலும் நண்பகல்11.45 மணியளவிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
மணலாற்றில் ஜனகபுர, கிரிப்பன்வெவ, ஆண்டான்குளம் பகுதிகளில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
வவுனியாவில் பண்டிவிரிச்சான், விளாத்திக்குளம், கள்ளிக்குளம் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
மன்னாரிலும் காந்தன்குளம், சிறிகுளம், பெரியகுளம், நெடுங்குளம் மற்றும் அடம்பன் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த அனைத்து மோதல்களிலும் 30 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.