* நாளை பெற்றோரின் சமாதிகளருகில் நல்லடக்கம்
டிட்டோகுகன்
மறைந்த அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவின் பூதவுடலுக்கு நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பிரதமர், அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர், எம்.பி.க்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அநுரா பண்டாரநாயக்காவின் பூதவுடல் தாங்கிய பேழை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான விசும்பாயவிலிருந்து வாகன ஊர்வலமாக முற்பகல் 11.35 மணியளவில் பாராளுமன்றத்தை வந்தடைந்தது.
சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில், பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலரும் இணைந்து பூதவுடலை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து அனைவரும் பூதவுடல் தாங்கிய பேழையை அஞ்சலி செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்கு தரையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தின் மேலாக இழுத்துச் சென்றனர்.
இதனையடுத்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர் என பலரும் மலர் வளையம் வைத்து அநுரா பண்டாரநாயக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அதன் பின்னர் அமைச்சர்கள், எம்.பி.க்கள் என ஒவ்வொருவராக பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா, பாராளுமன்ற பணியாளர்கள், பொலிஸார் உள்ளிட்ட பலரும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து அநுரா பண்டாரநாயக்காவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும் அங்கு சமூகமளித்திருந்த அநுரா பண்டாரநாயக்காவின் சகோதரிகளான சுனேத்ரா பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிடம் ஆறுதல் கூறி விடைபெற்றனர்.
ஜனாதிபதி ராஜபக்ஷ, அநுராவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சிறிது நேரத்தில் அங்கிருந்து விடைபெற்று சென்றுவிட்டார்.
பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், மங்கள சமரவீர எம்.பி. போன்றோர் இறுதி வரை அவ்விடத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவிடம் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் அநுரா பண்டாரநாயக்காவின் பூதவுடல் பிற்பகல் 12.30 மணியளவில் ஹொரகொல்லவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாராளுமன்ற கட்டிடத் தொடரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதேநேரம், நேற்று ஹொரகொல்ல நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட அநுரா பண்டாரநாயக்காவின் பூதவுடல், இன்று நாள் முழுவதும் மற்றும் நாளை பிற்பகல் வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை புதன்கிழமை பிற்பகல் முன்னாள் பிரதமரும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபகருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் சமாதிக்கருகில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.