* கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டோர் வேலைக்கு திரும்புவர்
எம்.ஏ.எம்.நிலாம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமெனவும், நடந்த சம்பவங்கள் போன்று இனிமேல் நடப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை மாலை ரூபவாஹினி ஊழியர் சங்கப்பிரதிநிதிகளிடம் உத்தரவாதமளித்ததையடுத்து, இன்று முதல் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை இடை நிறுத்திவிட்டு இன்று கடமைக்குத்திரும்ப ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முதல் கட்டாய லீவில் அனுப்பப்பட்டதையடுத்து பெரும் நெருக்கடி உருவானநிலையில், நேற்று மாலை 5 மணியளவில் அலரிமாளிகையில் ரூபவாஹினி ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுகள் நடத்தியதில், இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் தகவல் ஊடகத் துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அமைச்சர் மேர்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், மற்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் அநுர பெல்பிற்ற, பொலிஸ் மா அதிபர் விக்ரர் பெரேரா ஆகியோருடன் அரச ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்பட்டதோடு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
ரூபவாஹினி ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என அமைச்சர் மேர்வின் சில்வா இங்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்.
எனினும் நடத்த சம்பவங்களையிட்டு பெரும் கவலை தெரிவித்த ஜனாதிபதி இது போன்ற சம்பவங்கள் இனிமேல் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.
ஏற்கனவே இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து முழுஅளவிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி உத்தரவாதமளித்தார்.
ஜனாதிபதியின் உத்தரவாதத்தையடுத்து திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை இடை நிறுத்தி இன்று முதல் கடமைக்குத் திரும்புவதென ரூபவாஹினி ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து ஊழியர்களையும் வழமைபோல் இன்று கடமைக்கு வருமாறு சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 117 ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய சகலரையும் நிருவாகம் கட்டாய லீவில் அனுப்பியுள்ளது. இந்த ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவித்தலும் கொடுக்கப்படாமல் காலையில் கடமைக்குச் சென்றபோது சுதந்திர சதுக்கப்பக்க வாயிலிலும் பௌத்தாலோக்க வீதி முற்பக்க வாயிலிலும் பாதுகாப்பு அதிகாரிகள் கூடிநின்று நிருவாகத்தினால் வழங்கப்பட்ட பட்டியலில் காணப்பட்ட 117 பேரை மட்டுமே உட்செல்ல அனுமதித்து ஏனையவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடமைக்குச் செல்ல ஏன் மறுக்கப்படுகிறது எனக் கேட்ட போது நீங்கள் அனைவரும் கட்டாய லீவில் அனுப்பப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் சுதந்திர சதுக்கத்தில் கூடி மறியல் போராட்டத்திலீடுபட்டனர். இந்த மறியல் போராட்டச் செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. நீண்ட நேரம் வாதிட்டதன் பின்னர் மறியல் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு மட்டும் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, நேற்றைய தினம் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அனுமதிக்கப்பட்ட 117 ஊழியர்களுடன் இராணுவத்தின் இலத்திரனியல் தொழில் நுட்பப்பிரிவினர் அழைக்கப்பட்டு நிகழ்ச்சித் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமும் அமைந்துள்ள பிரதான வாயில்களான சுதந்திர சதுக்கப் பிரதேசத்திலும் பௌத்தாலோக்க மாவத்தை பகுதியிலும் நேற்று அதிகாலை முதல் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்கடமையிலீடுபடுத்தப் பட்டிருந்தனர். கலகத்தடுப்புப் பொலிஸாரும் தண்ணீர் பாய்ச்சு வாகனமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, ரூபவாஹினி ஊழியர்கள் மறியல் போராட்டத்திலீடுபட்டிருந்த வேளையில் இரகசியப் பொலிஸ் பிரிவினர் அங்கு வந்து வீடியோ ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்ததை காணமுடிந்தது. எதற்காக ஒளிப்பதிவு செய்யப்படுகின்றது எனக்கேட்டபோது மேலிடத்து உத்தரவுக்கமையவே ஒளிப்பதிவு செய்யப்படுவதாகவும் அதற்கு மேற்கொண்டு தம்மால் எதுவும் கூற முடியாது எனவும் தெரிவித்தனர்.
இந்த ஒளிப்பதிவு நாடாக்கள் ஊழியர்களை பழிவாங்குவதற்குப் பயன்படுத்தப்படலாமென உழைக்கும் பத்திரிகையாளர் சங்கச் செயலாளர் போத்தல ஜயசிங்க தெரிவித்தார்.
ஏற்கனவே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஐந்து ஊழியர்கள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டுமிருக்கின்றனர். அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது அடியாட்களும் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி கூட்டத்தாபனத்துக்குள் புகுந்து மேற்கொண்ட அடாவடித்தனத்தை விசாரித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பதிலாக கூட்டுத்தாபன ஊழியர்கள் ஒருவர்பின் ஒருவராக பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அப்பாவி ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.
ஜனாதிபதி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கத்தவறினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அனைத்து ஊழியர்களும் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக திரண்டு தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபடத் தீர்மானித்திருப்பதாக நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சங்கத்தலைவர் காஞ்சன மாரசிங்க தெரிவித்தார்.