இந்திய, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னையில் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான ரிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. கலரிக்கான ரூ.200 டிக்கெட் முதல் ஏ.சி.வசதியுடன் கூடிய இருக்கைக்கான ரூ.7,500 ரிக்கெற் வரை பல்வேறு கட்டணங்களில் ரிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
அனைத்து பிரிவிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரம் ரிக்கெட்டுகள் முதல் நாளில் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் ரூ. 16 இலட்சத்து 35 ஆயிரம் வசூல் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து பிரிவு ரிக்கெட்டுகளும் உள்ளன. விற்பனையாகும்வரை அனைத்தும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சேப்பக்கத்தில் கிரிக்கெட் போட்டி என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். கடைசியாக, இந்த மைதானத்தில் இந்திய - இலங்கை அணிகளிடையிலான டெஸ்ட் போட்டி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 2 முதல் 6 ஆம் திகதி வரை நடைபெற்றது. அதன் முதல் 3 நாள் ஆட்டமும் மழை காரணமாக முற்றிலும் நடைபெறவில்லை. கடைசி இரண்டு நாட்கள் மட்டும் ஆளுக்கொரு நாளாக இரு அணியினரும் விளையாடி, ரிக்கெற் வாங்கிய ரசிகர்களுக்கு ஆறுதலளித்தனர். மொத்தத்தில் போட்டி டிராவில் முடிந்தது.
சுமார் இரண்டேகால் ஆண்டுகளுக்குப் பின் சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுவதாலும், சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் முக்கோணத் தொடரை வென்றதாலும் இந்திய அணி வீரர்களைப் பார்க்க ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்க அணி வீரர்கள் 22 ஆம் திகதி சென்னை வந்தடைகின்றனர். அவர்கள் 23 ஆம் திகதி முதல் 3 நாட்கள் பயிற்சிகள் ஈடுபடவுள்ளனர். இந்திய அணியினர் அதற்கு அடுத்த நாள் வரலாம் எனத் தெரிகிறது.