இங்கிலாந்து- நியூஸிலாந்துக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 127 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கடின இலக்கை நோக்கி ஆடிய நியூஸிலாந்து அணி சைப்பொட்டத்தின் பந்துவீச்சில் நிலைகுலைந்து தோல்வியைத் தழுவியது.
நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இனிங்சில் இங்கிலாந்து 342, நியூஸிலாந்து 198 ஓட்டங்கள் எடுத்தன.
இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 144 ஓட்டங்களைக் கூடுதலாகப் பெற்றிருந்தது.
இரண்டாவது இனிங்ஸில் இங்கிலாந்து 293 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 438 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கு நியூஸிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூஸிலாந்துக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
இம்முறையும் ஹவ் (8) ஏமாற்றினார். பெல் (29), சின்கிளெர் (39), ஓரம் (30) ஆகியோர் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிளமிங் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிராட் வீசிய பந்தில் போல்டானார். முதல் இனிங்ஸில் நன்றாக விளையாடிய டெய்லர் இரண்டாவது இனிங்ஸிலும் சிறப்பாக ஆடி அரைச்சதம் (55) அடித்து ஆட்டமிழந்தார்.
விக்கெட் கீப்பர் மெக்குலம் வழக்கம்போல் அதிரடியாக ஓட்டங்கள் எடுத்தார். நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மெக்குலம் 43 ஓட்டங்களும் கப்டன் வெட்டோரி ஓட்டம் எதுவும் எடுக்காமலும் களத்திலிருந்தனர்.
சைப்பொட்டம் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து அணி வெற்றி பெற மேலும் 196 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிலும் 4 விக்கெட்டுக்கள் மட்டுமே இருந்த நிலையிலும் நேற்று 5 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
மேலும் 69 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஏனைய நான்கு விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட நியூஸிலாந்து அணி 311 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 127 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 5 ஆம் நாளில் சைப்பொட்டம் மேலும் இரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகனாக இங்கிலாந்தின் அம்புரோஸ் தெரிவானார்.
இந்த வெற்றி மூலம் 3 டெட்ஸ் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.