-அன்ரோனேட்டா பெஸ்லோவா-
இமாலய தாயகம் தொடர்பாக திபெத்தின் தலைநகரான லாசாவிலும் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் திபெத்தியர்களை அடக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை 1989 ஆம் ஆண்டில் தியனன்மென் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை கொடுமையாக நசுக்குவதற்கு எடுத்த நடவடிக்கையின் ஆரம்பமென கணிக்கப்படுகிறது.
ஆனால், 1989 இல் பெய்ஜிங் தலைவர்கள் நிராயுதபாணிகளான மாணவர்களுக்கும் சிவிலியன்களுக்கும் எதிராக யுத்த தாங்கிகளைப் பயன்படுத்திய போது இருந்ததிலும் பார்க்க 2008 இல் சீனா கூடுதல் ஆபத்துகளை எதிர்நோக்குகிறது. இன்று திபெத்தில் மேற்கொள்ளப்படும் கொடூரமான அடக்கு முறைகளால் சீனத் தலைவர்களுக்கு அதிக இழப்புகள் ஏற்படும். கடந்த வருட பிற்பகுதியில் எதேச்சாதிகார பர்மா ஆட்சியாளர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய பௌத்த பிக்குகளை அடக்கிய போது ஏற்பட்ட விளைவுகளிலும் பார்க்க மோசமான விளைவுகள் தற்போது சீனத் தலைவர்களுக்கு ஏற்படலாம்.
சீனாவுக்கு அதிகரித்து வரும் சர்வதேச மதிப்பை மட்டுமன்றி தேசிய ஐக்கியத்தையும் சுபிட்சத்தையும் தரக்கூடியதாக சர்வதேச ஒலிம்பிக் போட்டி இன்னும் 5 மாதங்களில் பெய்ஜிங்கில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் ஒளிவிளக்கு அஞ்சல் ஓட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் லாசா நகருக்கு வந்து சேர இருக்கும் இவ்வேளையில் தற்போதைய கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திபெத் ஆர்ப்பாட்டங்கள் சீனா அதன் சிறுபான்மை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதிருப்பதை சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் மிக்க சிரமத்துடன் ஏற்படுத்தப்பட்ட தேசிய ஐக்கியத்திற்குச் சவாலாக அமைகின்றன. இதனால், அதிருப்தியாளர்களுக்கு எதிராக சீனா பயமுறுத்தலையும் வன்முறைகளையும் பிரயோகிப்பது குறித்தும் சர்வதேச கவனம் திரும்புகிறது.
சீனா பிரிந்து சென்ற ஒரு மாகாணமாக கருதும் தாய்வானில் சர்ச்சைக்குரிய சர்வஜன வாக்கெடுப்பும் ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்பட இருக்கும் இவ்வேளையில், திபெத் ஆர்ப்பாட்டங்களின் மோசமான விளைவுகள் சீனத் தலைவர்களுக்கு மேலும் குழப்பத்தைக் கொடுக்கலாமெனவும் கருதப்படுகிறது.
திபெத் சீனாவின் நிர்வாகத்தில் இருந்து வரும் காலத்தில் சீனாவிலிருந்து பிரிந்து தனியாக இயங்கி வரும் தாய்வான் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் அங்கத்துவம் கோருவதை மக்கள் ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பதை அறிந்து கொள்வதற்காக மார்ச் மாதம் 22 ஆம் திகதி அங்கு சர்வஜன வாக்கெடுப்பும் நடைபெற இருக்கிறது.
சீனாவுடன் ஐக்கியப்படும் வழிகளை ஆதரிக்கும் குவேமன்ராங்கின் தேசியவாதக் கட்சியை தாய்வான் மக்கள் ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் தெரிவித்து வரும் இவ்வேளையில், திபெத்தில் இடம்பெறும் வன்முறைகள் எதிர்விளைவுகளைக் கொடுக்கலாமென கருதப்படுகிறது.
திபெத்தின் பிக்குகள் மீதும் சிவிலியன்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதால் ஏற்படக் கூடிய சர்வதேச மற்றும் உள்ளூர் ஆபத்துகளை மனதிற்கொண்டு சீனத் தலைவர்கள் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தி சர்வதேச அபிப்பிராயத்தைப் பெறும் முயற்சியில் பிரசார இயக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கலவரங்களைக் கண்டிப்பதற்கும் விட்டுக் கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு விடுக்கப்படும் சர்வதேச கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கும் சீனா சமயப் பிரமுகர்கள் சிலரை தயார் செய்து வைத்துள்ளது. திபெத் உயர் பீடத்தில் இரண்டாவது நிலையிலுள்ள 11 ஆவது பஞ்சன் லாமா ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், கட்சியையும் லாசா நகரின் பாதுகாப்பையும் ஸ்திரத் தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளார் என்று உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
நாட்டைப் பிரிப்பதற்கும் இன ஐக்கியத்தைக் குலைப்பதற்குமான சகல நடவடிக்கைகளையும் தாங்கள் எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். மக்களின் உயிருக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படும் வகையில் சிறு குழுவினர் புரியும் குற்றங்களைத் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் லாசாவிலிருந்து அவர் தெரிவித்தார்.
சீனா அங்கீகரித்துள்ள பஞ்சன் லாமா கயன்செயின் நோர்பு ஆவார். வெளிநாட்டில் தங்கியுள்ள தலாய் லாமாவும் அவரது விசுவாசிகளும் இவரை ஆதரிக்கவில்லை. பஞ்சன்லாமா பட்டத்தைச் சூட்டுவதற்காக திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் கெந்துன் சோகீ நயிமா 1995 இல் இத்தீர்மானம் பகிரங்கப்படுத்தப்பட்டதும் காணாமல் போய்விட்டான்.
சிறுவனை உலகிலேயே வயதிற் குறைந்த அரசியல் கைதி என்று வெளிநாட்டில் தங்கியுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1950 ஆம் ஆண்டில் திபெத்தை பொறுப்பேற்ற பின்னர் திபெத்தியர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதற்கு இந்த சிறுவனின் கதி ஓர் உதாரணமாகும்.
1930 களிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி குவோமின்ராங்கிற்கு எதிரான அதன் சிவில் யுத்தத்திற்கு மக்கள் ஆதரவைக் கோரியபோது சிறுபான்மை மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவதாக அடிக்கடி உறுதியளித்து வந்துள்ளது.
சுயாட்சியை அமைப்பதற்கும் சுயாதீன சமய ஸ்தலங்களை நிறுவுவதற்கும் சுதந்திரம் அளிப்பது இந்த சுய நிர்ணய உரிமையில் அடங்கும். ஆனால், கம்யூனிஸ்டுகள் பதவிக்கு வந்ததும் இந்த உறுதிமொழிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். ஒரு சில வருடங்களில் சிறுபான்மையினர் சுதந்திரம் கோருவது தேசத்துரோகமென அறிவிக்கப்பட்டது.
1959 ஆம் ஆண்டில் தங்கள் சொத்துகள் சுவீகரிக்கப்பட்டதையும் ஆசிரமங்கள் மூடப்பட்டதையும் கொடிய வறுமைக்கு இட்டுச் சென்ற சீனாவின் தவறான விவசாய வழிகாட்டுதலையும் ஆட்சேபித்து திபெத்தியர்கள் புரட்சி செய்த போது அரசாங்கம் அவர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்ததை அடுத்து தலாய் லாமா இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.
அதிலிருந்து இந்தியாவில் தர்மசலவில் இயங்கிவந்த திபெத்திய அரசாங்கம் முழுமையான சுதந்திரத்தைக் கோராமல் சீனாவுடன் உயர் மட்ட சுயாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற தலாய் லாமா உலகத் தலைநகரங்களுக்கு விஜயம் செய்து திபெத் போராட்டத்தைத் தெளிவுபடுத்தியதுடன், சீனத் தலைவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டும் வந்துள்ளார்.
1980 களின் நடுப்பகுதியில் சிறிது காலம் லிபரல் கட்சித் தலைவர் ஹியு யாவோபாங் அவருக்கு அடுத்த தலைவரான சாவோ சியாங் ஆகியோரின் பதவிக்காலத்தில் திபெத்தின் எதிர்காலம் குறித்து சீனத் தலைவர்களும் பிரிந்து சென்றவர்களும் பேச்சுவார்த்தை நடத்த தயார் செய்து கொண்டார்கள்.
ஆனால், கடும் போக்காளர்கள் ஹியு யாவோபாங்கை பதவியிலிருந்து கவிழ்த்ததையடுத்து பேச்சு முயற்சிகள் தடைப்பட்டன.அத்துடன் தியனன்மென் ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவித்த சாவோ சியாங்கும் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1989 இல் லாசாவில் புதிதாக இடம்பெற்ற கலவரங்களால் இராணுவச் சட்டம் அமுல்செய்யப்பட்டு தலாய்லாமாவுடன் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. 1989 இல் கடும் அடக்குமுறையை மேற்பார்வை செய்த திபெத்திய கட்சியின் செயலாளர் ஹியு ஜிந்தாவோ தற்போது சீன ஜனாதிபதியாகவும் கட்சித் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
தலாய் லாமா கடந்த திங்கட்கிழமை ஆற்றிய உரையில் கடந்த சில வருடங்களில் திபெத்தில் கூடுதலான ஒடுக்கு முறையும் கொடுமைகளும் இடம்பெற்றுள்ளன என்று கூறினார். சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக திபெத்தின் தேசிய எழுச்சி இடம்பெற்ற ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து லாசா நகர வீதிகளில் 300 க்கும் அதிகமான பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்த போதே தலாய் லாமா உரை நிகழ்த்தினார்.
இதேவேளை, பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக திபெத்திய நாடு கடந்த சமூகத்தினர் கத்மண்டு, தரம்சல, புதுடில்லி மற்றும் பல உலகத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினார்கள்.
லாசா கலவரங்களை அடக்குவதற்காக சீனப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டதை அடுத்து சீனாவிலும் திபெத்தியர்கள் வசிக்கும் இடங்களுக்கும் ஆர்ப்பாட்டங்கள் பரவின. சனிக்கிழமையன்று பௌத்த புனித தலமான லப்ராங் அமைந்துள்ள கன்சு மாகாணத்தின் சியாஹே நகரில் பிக்குமாரும் சிவிலியன்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். கலவரங்களின் போது 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்த போதிலும் திபெத்திய ஆர்வலர்கள் மேலும் அதிகமானோர் இறந்ததாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, திபெத் கலவரங்கள் காரணமாக ஒலிம்பிக் ஒளிவிளக்கைத் தாங்கிய அஞ்சல் ஓட்டம் தடைப்படும் என்று வெளியான செய்திகளுக்குப் பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள்.
எவரெஸ்ட் மலையை நோக்கிய ஒளிவிளக்கு அஞ்சல் ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் தடையெதுவுமின்றி நடைபெற்று வருகின்றன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் பேச்சாளர் சன் வீட் தெரிவித்தார்.
திபெத்தில் அடக்குமுறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்த தலாய் லாமா, ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான சீனாவின் உரிமையை தாம் ஆதரிப்பதாகக் கூறினார்.
ஆன்மீகத் தலைவர் தரம்சலவில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தொலைக்காட்சி செய்தியாளர் மகாநாட்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தகுதி சீனாவுக்கு உண்டு என்று கூறினார். ஆனால், ஒரு நல்ல நாடாக இருந்துகொண்டு இப்போட்டியை நடத்த வேண்டும் என்பதை நாம் சீனாவுக்கு அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
- ஐ.பி.எஸ்-