Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
ஊடகத்துறையின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்
[19 - March - 2008] [Font Size - A - A - A]
ஊடகத்துறையினர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் அண்மைக்காலமாக மிக மோசமாக அதிகரித்திருப்பதற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியில் பணியாற்றும் 500 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகள் சான்று பகர்கின்றன. ரூபவாஹினியில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவாதப்படுத்தியிருப்பதுடன் இனிமேல் ஊழியர்கள் பாதிக்கப்படுவதற்கான சம்பவங்கள் இடம்பெறாதென உறுதியளித்திருக்கின்றமை வரவேற்புக்குரிய விடயமாகும். ஊடகத்துறையினர் மீதான கெடுபிடிகளும் நெருக்குவாரங்களும் அண்மைக்காலமாக மோசமாக இலங்கையில் அதிகரித்து வருவதையிட்டு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ரூபவாஹினி தொலைக்காட்சியில் பணிபுரிவோருக்கே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலெனில் தனியார் ஊடகத்துறையினரின் பாதுகாப்பு என்பது நிச்சயமாக கவலைப்படுவதற்கும் கரிசனை கொள்வதற்குமான விடயமாகும். `பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும்' என்றும் அவர்கள் தமது பணியை தடங்கல்களின்றி மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஜாக்குலின் பார்க் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதுடன் ஊடகத்துறையினர் மீது உடல் ரீதியாகவும் வார்த்தைப் பிரயோகத்தின் மூலமும் தாக்குதல் நடத்தும் அரசாங்க உறுப்பினர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியிருக்கிறார். அரச தொலைக்காட்சியில் பணிபுரிவோர் உள்ளடங்கலாக பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களில் பணிபுரிவோரும் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாவது குறித்து அநேகமாக தினந்தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தச் செய்திகள் உண்மையிலேயே குழப்பமடைய வைப்பதாகவும் விரக்தியடையச் செய்பவையாகவும் உள்ளன. ரூபவாஹினிப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பணிபுரியும் சில பத்திரிகையாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு சட்டத்தரணிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருத்தல் என்பன தொடர்பாக பரவலாக கவலைகள் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஊடகத்துறையினரும் அவர்களின் குடும்பத்தவர்களும் நண்பர்களும் சகாக்களும் எதுவுமே செய்ய முடியாதவர்களாக விரக்தி நிலையில் இருக்கின்றனர். இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய ஜனநாயக விதிமுறைகள் ஒழுங்கான முறையில் கடைப்பிடிக்கப்படாமையே இந்த அவல நிலைக்குரிய காரணமாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த ஆபத்தான நிலைமையை சீர்ப்படுத்துவதற்குரிய ஏனைய ஜனநாயக நிறுவனங்களும் போதிய ஆற்றல் இல்லாமல் இருப்பதாக தென்படுவதாக கொழும்பு ஆயர் துலிப் டி சிகேரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஊடகத்துறையினர் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அதாவது அவர்கள் தமது உரிமைகளையும் பாதுகாப்பையும் உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு பாரிய இடையூறாக முன்னின்று துருத்திக்கொண்டிருப்பது எந்தவொரு சுய பிரக்ஞையுமற்ற அரசியல் கலாசாரமே தவிர வேறொன்றுமில்லை. இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தமென்ற சந்தேகத்தில் கைதாகும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக அவர்களின் குடும்பத்தவர்களுக்கு காரணத்தை அறிவிக்க வேண்டும் என்றும் ஆயர் துலிப் சிகேரா வலியுறுத்தியுள்ளதுடன் அவர்கள் உடனடியாக தமது சட்டத்தரணிகளுடன் தொடர்புகொள்வதற்கும் நீதியான விசாரணை நடத்தப்படுவதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும் என்பதும் இதுவே நல்லாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் உரிய இலட்சணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு நீதியமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் ஆயர் எந்தவிதமான பீதியுமின்றி, சகலருக்கும் நீதி கிடைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஊடக சுதந்திரம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவதாக வெறும் வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருப்பதால் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. ஊடகத்துறை எதிர்நோக்கும் தற்போதைய அவல நிலையையும் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாக அடைந்திருக்கும் விரக்தி நிலையையும் உடனடியாக சீர்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com