திபெத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைக் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் திபெத்திற்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளதுடன் அங்கிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
திபெத் பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை விடுவிக்கும் படி பல்வேறு போராட்டங்களில் அவ்வப்போது புத்த பிக்குகள் ஈடுபட்டு வந்தாலும் அதனை சீனா அடக்கி வந்தது.
அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தாலாய் லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக இந்திய-சீனா இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தலாய் லாமா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கினார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திபெத் தலைநகர் லாசாவில் கடும் வன்முறை வெடித்தது. புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது வன்முறை நிகழ்ந்தது
இதில் கடைகள் அடித்து நொருக்கப்பட்டன.பள்ளி,மருத்துவமனைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது.
வன்முறையாளர்களை ஒடுக்க மக்கள் யுத்தத்தை நடத்தப் போவதாக சீனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் திபெத்துக்கு வெளிநாட்டவர் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டுப் பயணிகள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
லாசாவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. 20 வெளிநாட்டுப் பயணிகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 3 ஜப்பானியர்கள் உட்பட 580 பேரை கலவரப் பகுதியிலிருந்து காப்பாற்றியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரத்தை ஒடுக்க சீன பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த அடக்குமுறையும் ஏவப்படவில்லை என்று திபெத்திய பிராந்திய நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களை அடக்க துப்பாக்கிளையோ அல்லது ஆயுதங்களையோ பயன்படுத்தவில்லை என்று திபெத் பிராந்திய அரசின் தலைவர் புன்கோக் தெரிவித்தார்.
திபெத்தில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கவலை தெரிவித்தார்.