-எம்.ஏ.எம்.நிலாம்-
மட்டக்களப்பு மாநகர சபையுடன் ஏனைய எட்டு பிரதேச சபைகளதும் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றின் 72 உறுப்பினர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நேற்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் தெரிவான பிரதேச சபைகளின் 61 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்குத் தெரிவான 11 உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சுபவேளையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணத்தைச் செய்துகொண்டனர்.
மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலில் மாநகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது. அக்கட்சி 11 இடங்களைப் பெற்றுக்கொண்டது.
ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று, போர தீவுப்பற்று, மண்முனைப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை தென்எருவில்பற்று, கோரளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரத்தை 61 உறுப்பினர்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டது.
இதைத்தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும் மீதமுள்ள இடங்கள் சுயாதீன குழுக்களாலும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றிய இரண்டு கட்சிகளதும் உறுப்பினர்கள் 72 பேர் மட்டுமே நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சுயேச்சைக் குழு உறுப்பினர்களும் நேற்றைய வைபவத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தை புலி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு ஜனநாயகத்தை மலரச் செய்தது போன்று மிக விரைவில் வடக்கையும் மீட்டெடுத்து அங்கும் தமிழ் மக்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
வடக்கு, கிழக்கிலும் முழு நாட்டிலும் கூடிய விரைவில் துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை தோற்றுவிப்பதே அரசின் ஒரே நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்த வைபவத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, கரு ஜயசூரிய, ஜனக பண்டார தென்னக்கோன், சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, ரிஷாத் பதியுதீன், நஜீப் ஏ.மஜீத், அமீர் அலி, டி.எம்.ஜயரத்ன, ஜோன் செனவிரட்ன, கிழக்கு மாகாண ஆளுநர் மோகான் விஜேவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, 72 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மட்டக்களப்பிலிருந்து கடும் பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் இன்று அல்லது நாளை மட்டக்களப்புக்கு பாதுகாப்புடன் திருப்பி கூட்டிச் செல்லப்படுவர் எனத் தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.