* 15 படையினர் காயம்
மன்னார் தள்ளாடி படைமுகாம் மீது நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு விடுதலைப்புலிகள் நடாத்திய ஆட்லறி ஷெல் தாக்குதலில் 15 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஷெல் தாக்குதலையடுத்து தள்ளாடி இராணுவ முகாம் மற்றும் சவுத்பார் படை முகாம்களிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி அகோர ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
நேற்று முன் தினமிரவு 10.40மணியளவில் ஆரம்பமான இந்த ஷெல் தாக்குதல், நேற்று காலை 10 மணிவரை மிகக் கடுமையாக நீடித்துள்ளது.இதனால் மன்னார் நகர் தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தது.
முதலில் நேற்று முன்தினமிரவு 10.15 மணியளவில் புலிகள் தள்ளாடி இராணுவ முகாம் மீது கடும் ஷெல் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
இதையடுத்தே, படையினர் முதலில் தள்ளாடி படைத்தளத்திலிருந்தும் பின்னர் சவுத்பார் முகாமிலிருந்தும் இரவிரவாக அகோர ஷெல் தாக்குதலை நடத்தினர்.
மிக நீண்ட நேரம் படை முகாம்களிலிருந்து பலத்த துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மன்னார் நகர மக்கள் பெரும் அச்சமும் பீதியும் அடைந்திருந்தனர்.
புலிகளின் ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்த 15 க்கும் மேற்பட்ட படையினர் அதிகாலை 1.30 மணியளவில் மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர், காலை 10 மணியளவில் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல் தொடர்பாக படைத்தரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.