நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக,இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரொபேட் ஓ பிளாய்க்குக்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா விளக்கமளித்துள்ளார்.
இராணுவத் தலைமையகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அமெரிக்கத் தூதுவரை அழைத்த இராணுவத் தளபதி,தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் இருதரப்பு இராணுவ விவகாரங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்ததாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இராணுவ தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில்;
வன்னியில் விடுதலைப் புலிகளுக்கெதிராக படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை மற்றும் அப் பகுதியிலிருந்து இடம் பெயரும் மக்களின் நிலை குறித்தும் அமெரிக்க தூதுவர் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாகப் பதிலளித்த இராணுவத் தளபதி, கிழக்கில் இடம் பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அங்கு சிவில் நிர்வாக நடவடிக்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க இராணுவத்தினரால் இலங்கை இராணுவத்தினருக்கும் ஏனைய படையணிகளுக்கும் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் குறித்து இலங்கைப் படையினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.